ரசிகர்களின் ஃபேவரைட் “96”.. மீண்டும் திரையரங்குகளில்!

2018-ம் ஆண்டு வெளியான ‘96’ திரைப்படத்தை இயக்குநர் சி. பிரேம்குமார் எழுதி இயக்கியிருந்தார். பள்ளிப் பருவத்தில் மலர்ந்த காதல், பல ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்பாராத விதமாக மீண்டும் சந்திக்கும் காதலர்களின் நினைவுகள் மற்றும் அந்த சந்திப்பால் ஏற்படும் உணர்வுப் போராட்டங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டது.

படத்தில் விஜய் சேதுபதி ‘ராம்’ கதாபாத்திரத்திலும், திரிஷா ‘ஜானு’ கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். இவர்களுடன் ஆதித்யா பாஸ்கர், கௌரி ஜி. கிஷன், தேவதர்ஷினி, பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தை சி. பிரேம்குமார் மேற்கொண்ட நிலையில், மகேந்திரன் ஜெயராஜு மற்றும் என். சண்முகசுந்தரம் ஒளிப்பதிவை கையாண்டுள்ளனர். ஆர். கோவிந்தராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

படத்தின் பாடல்களும் ‘96’ திரைப்படத்தின் உணர்வுப்பூர்வமான பயணத்தில் முக்கிய பங்கு வகித்தன. குறிப்பாக ‘காதலே காதலே’, ‘தி லைஃப் ஆஃப் ராம்’, ‘அந்தாதி’, ‘இரவிங்கு தீவாய்’ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன், இன்றளவும் இசை ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகின்றன.

Madras Enterprises சார்பில் எஸ். நந்தகோபால் தயாரித்த இப்படம் வெளியானபோது காதல் திரைப்பட ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக ராம் – ஜானு என்ற கதாபாத்திரங்களும், விஜய் சேதுபதி மற்றும் திரிஷாவின் இயல்பான நடிப்பும் ரசிகர்களிடையே படத்திற்கு தனி அடையாளத்தை உருவாக்கின.

காதல், பிரிவு, நட்பு, பள்ளிப் பருவ நினைவுகள் என பல்வேறு உணர்வுகளை மிகைப்படுத்தாமல் இயல்பான முறையில் பதிவு செய்த ‘96’, தமிழ் சினிமாவின் முக்கியமான காதல் படங்களில் ஒன்றாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திரைப்படம் வெளியாகி எட்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, ‘96’ மீண்டும் திரையரங்குகளுக்கு வருகிறது. அக்டோபர் 9-ம் தேதி நடைபெறவுள்ள இந்த மறுவெளியீடு, பழைய ரசிகர்களுக்கு ராம் – ஜானுவின் காதல் பயணத்தை மீண்டும் பெரிய திரையில் அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

அதே நேரத்தில், இப்படத்தை இதுவரை திரையரங்கில் பார்க்காத இளம் தலைமுறை ரசிகர்களும் ‘96’ திரைப்படத்தை பெரிய திரையில் முதன்முறையாக ரசிக்கும் வாய்ப்பைப் பெற உள்ளனர். இதனால் மறுவெளியீட்டுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.