GM Morgan Films தயாரிப்பில், R. ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரைஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘டிரோன்ஸ்’ திரைப்படம் வரும் அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர், வழக்கமான கதைக்களத்திலிருந்து மாறுபட்ட கற்பனை உலகத்தை அறிமுகப்படுத்துகிறது. ‘ப்ளாக் ஹோல்’ எனப்படும் மர்மமான பகுதிக்குள் மூன்று பேர் நுழைவது, அந்த இடத்தின் பின்னணியைத் தேடும் காவல் அதிகாரி, சூனியக்காரிக்கும் தேவதைக்கும் இடையே நடைபெறும் மோதல் என பல வித்தியாசமான சம்பவங்கள் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன.
ஹாரர், ஃபேண்டஸி மற்றும் சயின்ஸ் ஃபிக்ஷன் ஆகிய அம்சங்களுடன் நகைச்சுவையையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டிரெய்லர், படத்தின் கற்பனை உலகம் குறித்த ஆர்வத்தை அதிகரித்துள்ளது. மர்மம், மாயாஜாலம் மற்றும் சுவாரஸ்யமான திருப்பங்கள் நிறைந்த கதைக்களம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.
இதனுடன், படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்கும் புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது. அதில் சிவப்பு நிற உடையில் சூனியக்காரியைப் போன்ற தோற்றம் கொண்ட ஒரு பெண்ணும், வெள்ளை நிற உடையில் தேவதையைப் போன்ற மற்றொரு பெண்ணும் நேருக்கு நேர் மோதும் காட்சியில் இடம்பெற்றுள்ளனர். இருவருக்கும் இடையிலான மாயாஜால சக்திகளின் மோதலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த போஸ்டரில், ‘விட்ச் Vs ஏஞ்சல்’ என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
ஏற்கெனவே வெளியான ‘டிரோன்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் மற்றும் புதிய போஸ்டர் அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.
படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை R. ராகவ் மிர்தாத் மேற்கொண்டுள்ளார். ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவையும், ஹரி S.R. இசையையும் கவனித்துள்ளனர். சதீஷ் சூர்யா படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
கனவில் மட்டுமே சாத்தியமாகும் விசித்திரமான நிகழ்வுகள் நிஜ வாழ்க்கையில் நடந்தால் என்னவாகும் என்ற வித்தியாசமான கற்பனையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மர்மமான கதாபாத்திரங்கள், மாயாஜால உலகம், விறுவிறுப்பான சம்பவங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் என பல்வேறு அம்சங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன.
தொடர் விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் ‘டிரோன்ஸ்’, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் ஹாரர், ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் காமெடி ஆகியவற்றை ஒருங்கிணைத்து உருவாகியுள்ளது. குறிப்பாக மாயாஜாலம் மற்றும் கற்பனை உலகம் சார்ந்த கதைகளை விரும்பும் ரசிகர்களுக்கு இப்படம் வித்தியாசமான திரையனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
GM Morgan Films சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘டிரோன்ஸ்’ திரைப்படத்தை ஃபைவ் ஸ்டார் நிறுவனத்தின் K. செந்தில் வெளியிடுகிறார். ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம், அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.





