தசரத மன்னராக அருண் கோவில்.. “ராமாயணா” படத்தின் புதிய போஸ்டர் வைரல்!

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் நடிகர் அருண் கோவில், அயோத்தி மன்னரும் ராமரின் தந்தையுமான தசரதர் கதாபாத்திரத்தில் கம்பீரமாக தோன்றுகிறார்.

இந்திய ரசிகர்கள் மத்தியில் ராமர் கதாபாத்திரத்துடன் ஆழமாக இணைந்திருக்கும் அருண் கோவில், தற்போது அதே காவியத்தில் ராமரின் தந்தையான தசரதராக நடிப்பது படத்திற்கு கூடுதல் சிறப்பை சேர்த்துள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தில், அவரது கதாபாத்திரத்தின் முதல் தோற்றத்தை இந்த புதிய போஸ்டர் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சியில் ராமராக நடித்து ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்த அருண் கோவில், தற்போது அயோத்தி அரசராகவும் ராமரின் தந்தையாகவும் ‘ராமாயணா’ படத்தில் தோன்றுகிறார். ராமாயணக் கதையுடன் ஏற்கெனவே உணர்வுப்பூர்வமான தொடர்பைக் கொண்டிருக்கும் ஒரு நடிகர், அதே காவியத்தின் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில், அரசருக்குரிய கம்பீரமான தோற்றத்தில் அருண் கோவில் காட்சியளிக்கிறார். அவரது ஆடை, அணிகலன்கள் மற்றும் ஒட்டுமொத்த தோற்றம் தசரத மன்னரின் அதிகாரத்தையும் அரச கம்பீரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. ராமராக அருண் கோவிலை பார்த்து வளர்ந்த ரசிகர்கள், தற்போது அவரை தசரதராக பார்க்கவிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமர் கதாபாத்திரத்திலும், சாய் பல்லவி சீதையாகவும், ராக்கிங் ஸ்டார் யஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் நடித்துள்ளனர்.

நமித் மல்ஹோத்ராவின் Prime Focus Studios, எட்டு முறை ஆஸ்கர் விருது பெற்ற DNEG மற்றும் யஷ் நிறுவனமான Monster Mind Creations ஆகியவை இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றன. இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த பிரம்மாண்ட காவியத்தின் முதல் பாகம் நவம்பர் 5, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இரண்டாம் பாகம் 2027-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ராமாயணா’ திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இந்தியா முழுவதும் IMAX திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது. இந்தியாவுக்கு வெளியான சர்வதேச விநியோகத்தை Sony Pictures மேற்கொள்கிறது. அதேபோல், இந்தி மொழி சந்தைக்கான விநியோகப் பணிகளை Dharma Productions மேற்கொள்ளவுள்ளது.