புதுமுகங்களுடன் உருவாகும் “ஆண்ட”… ராசி அழகப்பனின் அடுத்த படைப்பு!

தரமான கதைக்களங்களையும், குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய திரைப்படங்களையும் தொடர்ந்து வழங்கி வரும் மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல், தனது அடுத்த தயாரிப்பாக ‘ஆண்ட’ திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிறுவனம் தயாரித்த முதல் திரைப்படமான ‘வண்ணத்துப்பூச்சி’, சிறுவர்களை மையமாகக் கொண்ட தரமான படைப்பாக வெளியாகி பாராட்டுகளை பெற்றதோடு, தமிழக அரசின் சிறந்த குடும்ப நெறிமுறைகளை வலியுறுத்திய திரைப்படம் என்ற விருதையும் வென்றது. மேலும், அதில் நடித்த குழந்தை நட்சத்திரம் லக்ஷ்மி, அந்த ஆண்டின் சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற தமிழக அரசு விருதைப் பெற்றார். இதன்மூலம் ஒரே திரைப்படம் இரண்டு தமிழக அரசு விருதுகளைப் பெற்று கவனம் ஈர்த்தது.

அதனைத் தொடர்ந்து, எழுத்தாளர் மற்றும் இயக்குநர் ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘குரங்கு பெடல்’ திரைப்படத்தையும் இந்த நிறுவனம் தயாரித்தது.

இப்போது, தனது புதிய முயற்சியாக ‘ஆண்ட’ திரைப்படத்தை உருவாக்கி வருகிறது. இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மற்றும் தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் ராசி அழகப்பனே ஏற்றுள்ளார்.

ஜென்சி (Gen Z) தலைமுறையின் பார்வையுடன் தொடங்கி, 1980-களின் வாழ்க்கை முறையையும், அந்தக் கால மனிதர்களின் உணர்வுகளையும் அழுத்தமாக பதிவு செய்யும் வாழ்வியல் திரைப்படமாக ‘ஆண்ட’ உருவாகி வருகிறது. தட்சணாமூர்த்தி என்ற மனிதரின் முழு வாழ்க்கைப் பயணமே படத்தின் மையக்கதையாக அமைகிறது.

வானளாவிய கனவுகளுடன் பயணித்த ஒரு மனிதன், வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் சந்திக்கும் அனுபவங்கள், குடும்ப உறவுகள், சமூகப் பொறுப்பு, மனிதநேயம் மற்றும் காலத்தின் மாற்றங்கள் ஆகியவற்றை ஆழமான உணர்வுகளுடன் பதிவு செய்யும் படைப்பாக இந்த திரைப்படம் உருவாகிறது. காலம் மாறினாலும் மனித மதிப்புகளும் உறவுகளும் நிலைத்திருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது.

திரைப்படத்தின் அனைத்து முக்கிய கதாபாத்திரங்களிலும் புதுமுகங்களே அறிமுகமாக உள்ளனர். இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில், தொழில்நுட்பக் குழுவை இறுதி செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இப்படம், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பகுதிகளிலும், வெளிநாடுகளின் சில முக்கிய இடங்களிலும் படமாக்கப்பட உள்ளது.

மனித உறவுகள், சமூகப் பொறுப்பு, வாழ்க்கையின் மாற்றங்கள் மற்றும் மனிதநேயத்தை மையமாகக் கொண்ட ‘ஆண்ட’, தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க தரமான படைப்பாக உருவாகும் என்ற எதிர்பார்ப்பை திரைப்பட வட்டாரங்களில் ஏற்படுத்தியுள்ளது.