“ஐ , நோபடி” நிசம் பஷீர் இயக்கத்தில் சுப்ரியா மேனன் மற்றும் முகேஷ் ஆர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை ஜேக்ஸ் பெஜாய். இந்த படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன், பார்வதி திருவோத்து, ஹக்கிம் ஷாஜகான், லுக்மான் அவரன், கணபதி, வினய் ஃபோர்ட், விஜயராகவன், அசோகன், மதுபால், சனா அல்தாஃப் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மூன்று கொள்ளையர்கள் வங்கியை கொள்ளையடிக்கும் போது, அங்கு இருந்த சாதாரண மனிதரான பிரித்விராஜை பிணைக் கைதியாக அழைத்துச் செல்கிறார்கள். பின்னர் கொள்ளையர்கள் விபத்தில் உயிரிழக்க, அவர்களிடம் இருந்த ஒரு முக்கிய ஆதாரம் பிரித்விராஜிடம் சிக்குகிறது. இதன் பிறகு அவர் மீது போலீசுக்கும், ஊடகங்களுக்கும் சந்தேகம் உருவாகிறது. எந்தத் தவறும் செய்யாத ஒருவர் எப்படி சந்தேகத்தின் வலையில் சிக்குகிறார், அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார், கொள்ளை பணம் என்ன ஆனது என்பதையே சுவாரஸ்யமான திரைக்கதையாக “ஐ , நோபடி” படம் சொல்கிறது.
பிரித்விராஜ் சுகுமாரன் வழக்கம்போல மிகக் கட்டுப்பாடான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். வசனங்களை விட முகபாவனைகள், அமைதி, கண்களின் வெளிப்பாடு மூலமே பல உணர்வுகளை கடத்துகிறார். சாதாரண குடும்ப மனிதராகவும், சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் ஒருவராகவும் மிகவும் நம்பகமாக நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளிலும் அவரது திரை இருப்பு வலுவாக இருக்கிறது.
பார்வதி திருவோத்து குறைவான காட்சிகளிலேயே குடும்பத்தின் உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்துகிறார். ஹக்கிம் ஷாஜகான், அசோகன், விஜயராகவன், சங்கர் ராமகிருஷ்ணன், மதுபால், ஜியா உள்ளிட்ட அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு தேவையான அளவில் சிறப்பாக பங்களித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறார். விபத்து, துரத்தல், சண்டை என ஒவ்வொரு காட்சியையும் பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். ரமீஸ் எம்.பி-யின் படத்தொகுப்பு திரைக்கதையின் வேகத்தை ஒரு நொடியும் குறைக்காமல் நகர்த்துகிறது.
ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை பதட்டத்தை தொடர்ந்து தக்கவைத்திருக்கிறது. அமைதியான காட்சிகளிலும் கூட இசை மூலம் பரபரப்பை உருவாக்கியிருப்பது சிறப்பு.
எழுத்தாளர் சமீர் அப்துலின் திரைக்கதை இந்தப் படத்தின் முதுகெலும்பு. ஒரு சிக்கலில் இருந்து வெளியேற முயலும் நாயகனை அடுத்த நொடியில் இன்னொரு பிரச்சினைக்குள் தள்ளி, பார்வையாளர்களின் கவனத்தை இறுதி வரை பிடித்து வைத்திருக்கிறார். இயக்குநர் நிசாம் பஷீர் அந்த எழுத்தை திரையில் அதே விறுவிறுப்புடன் உயிர்ப்பித்திருக்கிறார்.
இரண்டாம் பாதியில் சண்டைக் காட்சிகள் சற்று அதிகமாக நீளுவது மட்டும் சிறிய குறையாக தோன்றினாலும், அவற்றின் தரமும் படமாக்கப்பட்ட விதமும் அந்த குறையை பெரிதாக உணர விடுவதில்லை.
புத்திசாலித்தனமான திரைக்கதை, வலுவான நடிப்பு, தொழில்நுட்பத் தரம் மற்றும் இறுதி வரை குறையாத சஸ்பென்ஸ் ஆகியவற்றால் ‘ஐ, நோபடி’ ஒரு தரமான திரில்லர் அனுபவமாக மாறியுள்ளது.
வங்கி கொள்ளையை மையமாகக் கொண்டு பல படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், கொள்ளையை செய்தவர்களை விட அதில் எந்தத் தொடர்பும் இல்லாத ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து, தொடக்கம் முதல் முடிவு வரை பதட்டம் குறையாமல் திரைக்கதை நகர்வது தான் ‘ஐ, நோபடி’ திரைப்படத்தின் மிகப்பெரிய பலம்.
“ஐ, நோபடி” படத்திற்கு மதிப்பீடு 4/5
சஸ்பென்ஸ், கிரைம் திரில்லர் ரசிகர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய படம்.





