“லவ் ஓ லவ்” திரை விமர்சனம்

லவ் ஓ லவ்” மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் தனஞ்செயன் கோவிந்த், பிரதீப் பார்த்திபன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை முத்தையா கோபாலரத்தினம். இந்த படத்தில் பவிஷ் நாராயண், நாகா துர்கா, செல்வராகவன், கே.எஸ். ரவிகுமார், வனிதா விஜயகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

காதலுக்காக எதையும் தியாகம் செய்யும் இளைஞனின் வாழ்க்கை, அதே காதலால் எப்படி தலைகீழாக மாறுகிறது என்பதையும், உறவில் புரிதலும் பொறுப்பும் எவ்வளவு முக்கியம் என்பதையும் நகைச்சுவை கலந்த குடும்பப் பொழுதுபோக்கு பாணியில் சொல்லும் திரைப்படம் தான் ‘லவ் ஓ லவ்’.

மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளம் பெற்றாலும், தனது ஆசைகளை விட குடும்பத்தையே முன்னிலைப்படுத்தும் இளைஞராக வாழ்கிறார் நாயகன் பவிஷ். தந்தையிடம் முழு சம்பளத்தையும் ஒப்படைத்து, தனக்கான செலவுக்குக் கூட பணம் கேட்டு வாங்கும் அளவுக்கு பொறுப்புடன் வாழும் அவரது வாழ்க்கையில் காதல் நுழைந்ததும் எல்லாமே மாறுகிறது. காதலியின் ஆடம்பர வாழ்க்கை, அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புகள், புரிதல் இல்லாத உறவு ஆகியவற்றால் கடனிலும் மன உளைச்சலிலும் சிக்கிக் கொள்ளும் அவர், அந்த உறவை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்கிறார்.

ஆனால், பவிஷை திருமணம் செய்ய வேண்டும் என்ற உறுதியில் இருக்கும் நாயகி நாக துர்காவுக்கு, அவர் ஒரு வித்தியாசமான சவாலை முன்வைக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக காதலனாக தான் செய்த அனைத்தையும், நான்கு மாதங்கள் காதலியாக நீ செய்ய வேண்டும்; அதை வெற்றிகரமாக நிறைவேற்றினால் திருமணம், இல்லையெனில் பிரிவு என்கிறார். இந்த நிபந்தனை அவர்களது உறவை எந்த திசைக்கு அழைத்துச் செல்கிறது என்பதே “லவ் ஓ லவ்” படத்தின் கதை.

பவிஷ் தனது இரண்டாவது படத்தில் முந்தைய படத்தை விட முன்னேற்றம் காட்டியிருந்தாலும், ஒரு முழுநீள காதல் படத்தை தோளில் சுமக்கும் அளவுக்கு திரை ஆளுமையை இன்னும் வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. உணர்ச்சி காட்சிகளில் தாக்கம் குறைவாக இருப்பதால், கதாபாத்திரத்தின் வலியும் பார்வையாளர்களிடம் முழுமையாக சென்று சேரவில்லை.

நாயகி நாக துர்கா, எளிமையான தோற்றத்தில் இருந்தாலும் காதல் பட நாயகிக்குத் தேவையான கவர்ச்சி மற்றும் திரை இருப்பு இரண்டிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் நாயகன்-நாயகி இடையேயான காதல் ரசாயனம் பல இடங்களில் செயற்கையாகவே தோன்றுகிறது.

கே.எஸ். ரவிக்குமார், செல்வராகவன், வனிதா விஜயகுமார் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்கள் இருந்தாலும், அவர்களது கதாபாத்திரங்கள் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. பல துணை கதாபாத்திரங்கள் வந்துவிட்டு மறைவதால், திரைக்கதைக்கு பெரிதாக உதவுவதில்லை.

பி.ஜி. முத்தையாவின் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய ஆறுதலாக இருக்கிறது. வண்ணமயமான காட்சிகள் மற்றும் நேர்த்தியான ஃபிரேம்கள் படத்திற்கு தரத்தை கூட்டுகின்றன. ஆனால் காட்சிகள் அழகாக இருப்பதால் மட்டும் படம் சுவாரஸ்யமாக மாறிவிடாது என்பதையும் படம் நினைவூட்டுகிறது.

பாக்ஸனின் இசையில் பாடல்கள் வழக்கமான கமர்ஷியல் பாணியில் இருந்தாலும், படம் முடிந்த பிறகும் நினைவில் நிற்கும் பாடல் ஒன்றுகூட இல்லை. பின்னணி இசையும் பல இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுகிறது.

இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன், காதல் உறவில் இருக்கும் பொறுப்பு மற்றும் புரிதலை பேச முயற்சித்திருந்தாலும், திரைக்கதையில் புதுமையை தொடர்ந்து தக்க வைத்திருக்க முடியவில்லை. சில காட்சிகள் ஏற்கனவே பார்த்த உணர்வை ஏற்படுத்துகின்றன. நகைச்சுவையும் எதிர்பார்த்த அளவுக்கு வேலை செய்யாததால், படம் பல இடங்களில் சோர்வடைகிறது. பல காட்சிகள் நீளமாக இழுக்கப்படுவதால், கதையின் வேகம் அடிக்கடி தடுமாறுகிறது.

காதல் எப்படி மலர்ந்தது என்பதை விட, காதலில் ஏற்படும் பிரச்சனைகளை மட்டும் மையமாக வைத்திருப்பது வித்தியாசமான முயற்சியாக இருந்தாலும், அந்த உறவின் ஆழத்தை உணர வைக்கும் தருணங்கள் குறைவாக இருப்பது படத்தின் மிகப்பெரிய பலவீனம். காதல் பாடல்கள், உணர்ச்சி வசனங்கள், வலுவான காதல் காட்சிகள் ஆகியவை இல்லாததால், கதாபாத்திரங்களுடன் பார்வையாளர்களால் எளிதில் ஒன்றிணைய முடியவில்லை.

காதலில் புரிதல் முக்கியம் என்ற நல்ல கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘லவ் ஓ லவ்’, அதை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் சொல்ல வேண்டிய இடத்தில் தடுமாறி, பல இடங்களில் சலிப்பை ஏற்படுத்தும் சாதாரண காதல் படமாகவே முடிகிறது.

“லவ் ஓ லவ்” படத்திற்கு மதிப்பீடு 3/5

சுமாரான காதல் அனுபவம்