“சீன்” திரை விமர்சனம்

“சீன்” ஜித்து மாதவன் இயக்கத்தில் ஜோதிகா, சூர்யா (2D Entertainment) மற்றும் சிகரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை சுஷின் ஷியாம். இந்த படத்தில் சூர்யா, நஸ்ரியா நசீம், நஸ்லன், ஆனந்தராஜ், லால், ராஜ்பிரியன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

துல்லியமான புலனாய்வுத் திறன் கொண்ட காவல்துறை அதிகாரியான சூர்யா, கண் பார்வையை இழந்ததால் பணியிலிருந்து விலகுகிறார். இதற்கிடையே, அவர் ஏற்கெனவே கைது செய்த சைக்கோ கொலையாளியின் பாணியில் நகரில் தொடர் கொலைகள் நடக்கின்றன. இதன் பின்னணியைக் கண்டறிய முடிவு செய்யும் சூர்யா, தனது உதவியாளராக நஸ்ரியா நசீமை இணைத்துக்கொண்டு தனிப்பட்ட முறையில் விசாரணையில் இறங்குகிறார். கண் பார்வையின்றி, பல சவால்களை எதிர்கொண்டு உண்மையான குற்றவாளியை அவர் கண்டுபிடிக்கிறாரா என்பதே “சீன்” படத்தின் கதை.

காவல்துறை அதிகாரியாக இதுவரை பல கம்பீரமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள சூர்யா, இப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட இன்பராஜ் கதாபாத்திரத்தில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். கண் பார்வையற்றவராக நடித்திருக்கும் அவர், அந்தக் குறைபாட்டால் ஏற்படும் சவால்கள், மனவேதனை, உதவியாளரின் துணையுடன் பயணிப்பது என ஒவ்வொரு உணர்வையும் மிக இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். சூர்யாவின் திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரமாக இது அமையும்.

நாயகியாக நடித்திருக்கும் நஸ்ரியா நஸீம், தனது துறுதுறுப்பான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். சூர்யாவுக்கு உறுதுணையாகப் பயணிப்பது, அவர் மீதான காதலை மெல்லிய உணர்வுகளுடன் வெளிப்படுத்துவது எனத் தனக்குக் கிடைத்த வாய்ப்பை அழகாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

நஸ்லன் தனது இயல்பான நடிப்பாலும், நகைச்சுவை கலந்த உடல்மொழியாலும் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார். குறிப்பாக சூர்யாவுடனான காட்சிகளில் இருவருக்கும் இடையிலான நடிப்புப் போட்டி ரசிக்க வைக்கிறது.

சூர்யாவின் தந்தையாக நடித்திருக்கும் ஆனந்தராஜ், காவல்துறை உயர் அதிகாரியாக வரும் லால், இன்ஸ்பெக்டர்களாக நடித்திருக்கும் ராஜ்பிரியன், சுரேஷ் மதிழயகன் மற்றும் நஸ்ரியாவின் தந்தையாக நடித்திருக்கும் கஜராஜ் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களது இயல்பான நடிப்பால் கதைக்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.

புலனாய்வு திரில்லர் கதைக்குத் தேவையான பரபரப்பையும் மர்மத்தையும் ஒளிப்பதிவு சிறப்பாகக் கடத்துகிறது. குறிப்பாக கொலைகள் தொடர்பான விசாரணைக் காட்சிகளும், சூர்யாவின் பார்வைக் குறைபாட்டை மையப்படுத்திய காட்சிகளும் கவனம் ஈர்க்கின்றன.

சுஷின் ஷியாமின் பின்னணி இசை காட்சிகளின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கிறது. மேலும் பதற்றமான தருணங்களுக்கு கூடுதல் வலு சேர்க்கிறது.

படத்தொகுப்பு திரைக்கதையின் வேகத்திற்கு உதவியிருக்கிறது.

ஜித்து மாதவன் தனது தனித்துவமான கதை சொல்லும் பாணியில் நகைச்சுவை, சுவாரஸ்யம், எதிர்பாராத திருப்பங்கள் என அனைத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார். கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கும் விதமும், அவர்களுக்கிடையே நிகழும் உரையாடல்களும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. குறிப்பாக நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதுடன், அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பையும் உருவாக்குகின்றன.

வழக்கமான திரைப்படங்களிலிருந்து மாறுபட்ட கதைக்களத்துடன் பயணிக்கும் இப்படம், எதிர்பாராத சம்பவங்கள், வித்தியாசமான மனிதர்கள் மற்றும் அவர்களைச் சுற்றி நிகழும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை நகைச்சுவை கலந்த திரைக்கதையில் விவரிக்கிறது. கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவுகளும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் கதையின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கின்றன.

கண் பார்வையற்ற காவல்துறை அதிகாரியை மையமாக வைத்து ஒரு புலனாய்வு திரில்லரை உருவாக்கியிருப்பது படத்தின் முக்கியமான சிறப்பு. வழக்கமான காவல்துறை விசாரணைப் படங்களிலிருந்து மாறுபட்டு, நாயகனின் குறைபாட்டையே விசாரணைக்கான சவாலாக மாற்றியிருக்கும் விதம் சுவாரஸ்யமானது.

கதையின் மர்ம முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கும் விதமும், கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவுகளும் படத்திற்குப் பலம் சேர்க்கின்றன. வித்தியாசமான முயற்சியால் இயக்குநர் கவனம் ஈர்க்கிறார்.

வழக்கமான கமர்ஷியல் திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு, வித்தியாசமான கதை சொல்லும் முறையிலும் நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு அம்சங்களுடனும் உருவாகியுள்ள ‘சீன்’, ரசிகர்களுக்கு நல்ல திரை அனுபவத்தை வழங்கும் திரைப்படமாக அமைகிறது. ஜித்து மாதவனின் இயக்கப் பாணியை ரசிப்பவர்களுக்கு இப்படம் நிச்சயம் பிடிக்கும்.

“சீன்” படத்திற்கு மதிப்பீடு 4/5

“சீன்” வித்தியாசமான திரில்லர்