“வாரண்ட்” விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் சிவன் பிக்சர்ஸ், எஸ் ஸ்டியோஸ் – பிரசாந்த் பாண்டியராஜ், பி.விஷால், பி.எம்.ஆதீஷ்வர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை சாம்.சி.எஸ். இந்த படத்தில் பிரசாந்த் பாண்டியராஜ், நர்மிதா.எம்.வி, சாயா தேவி, அருள்ஜோதி, பாலாஜி சக்திவேல், கெளசல்யா, அருள்தாஸ், மீனா, ஹெலோ கந்தசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
குடும்பத்தின் ஒரே மகனான கோட்டை கருப்பசாமியை எப்படியாவது அரசு ஊழியராக்க வேண்டும் என்ற ஆசையில் அவரது தந்தை பல அரசு தேர்வுகளை எழுத வைக்கிறார். ஆனால் எந்தத் தேர்விலும் வெற்றி பெறாத அவர், இறுதியில் உறவினரின் உதவியால் காவல்துறையில் காவலராக சேர்கிறார். சாதாரண அரசு வேலை என்று நினைத்து காவல்துறையில் காலடி எடுக்கும் அந்த இளைஞன், அங்குள்ள கடுமையான கட்டமைப்பு, அதிகார ஈகோ, அவமானங்கள் மற்றும் மன அழுத்தங்களை சமாளிக்க முடியாமல் திணறுகிறார்.
சக காவலர்களின் கேலி, கிண்டல் மற்றும் அலட்சியத்தால் மனதளவில் பாதிக்கப்படும் அவர், ஒரு கட்டத்தில் காவல்துறை பணியே வேண்டாம் என்று முடிவு செய்கிறார். ஆனால் தன்னை அவமானப்படுத்தியவர்களுக்கு “தான் யார்?” என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற கோபமும் வெறுப்பும் அவரை ஆபத்தான பாதைக்கு இட்டுச் செல்கிறது. அவர் எடுக்கும் அதிரடி முடிவுகள் எதிர்பாராத பெரிய சிக்கலை உருவாக்க, அதிலிருந்து அவர் மீண்டாரா இல்லையா என்பதையே ‘வாரண்ட்’ சுவாரஸ்யமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சொல்கிறது.
‘அமுல் பேபி’ போல அப்பாவியாக இருக்கும் கோட்டை கருப்பசாமி கதாபாத்திரத்தில் பிரசாந்த் பாண்டியராஜ் மிக இயல்பாக நடித்திருக்கிறார். அமைதியாக அவமானங்களை சகித்துக்கொள்ளும் ஒருவன், தன்னை நிரூபிக்க எடுத்துக்கொள்ளும் அதிரடி முயற்சிகளில் வெளிப்படும் அவரது உடல் மொழியும் உணர்ச்சிகளும் பாராட்டத்தக்கவை.
நாயகிகளாக நடித்துள்ள நர்மிதா எம்.வி, அருள்ஜோதி மற்றும் சாயா தேவி ஆகியோருக்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லாவிட்டாலும், கதையின் உணர்வுப்பூர்வ ஓட்டத்திற்கு பக்கபலமாக இருக்கிறார்கள். குறிப்பாக சாயா தேவியின் கதாபாத்திரம் நினைவில் நிற்கிறது.
பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், ஹெலோ கந்தசாமி உள்ளிட்ட அனைத்து துணை நடிகர்களும் காவல்துறை சூழலுக்கு ஏற்ற இயல்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் அசோக் குமார் காவல் நிலையங்களின் நெருக்கடியான சூழலை உணர வைக்கும் விதத்தில் காட்சிகளை அமைத்திருக்கிறார். சாம் சி.எஸ் அவர்களின் பின்னணி இசை சில இடங்களில் அதிகமாக இருந்தாலும், தொடர் முழுவதும் பதட்டத்தை உயிரோட்டமாக வைத்திருக்கிறது.
திரைக்கதை மெதுவாக செல்லும் இடங்களில் கூட, காவலர்களின் குடும்ப வாழ்க்கை, மன அழுத்தம் மற்றும் பணிச்சுமையை உணர்த்தும் காட்சிகள் மூலம் பார்வையாளர்களை தொடருடன் இணைத்துவிடுகிறது. காவல் மரணம் போன்ற கனமான விஷயத்தை சுமார் நான்கரை மணி நேரம் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் இயக்குநர் விக்னேஷ் நடராஜன் பாராட்டுக்குரியவர்.
காவல்துறையின் வெளிப்படாத மன அழுத்தங்களையும், பணிச்சுமையால் மனிதர்கள் எப்படி மாறுகிறார்கள் என்பதையும் உண்மைக்கு நெருக்கமாக பதிவு செய்திருக்கும் இந்த தொடர், காவலர்களின் மீது ஒருவித இரக்கத்தையும் புரிதலையும் உருவாக்குகிறது. அதே நேரத்தில், அதிகார திமிரும் அமைப்பின் அழுத்தங்களும் ஒரு சாதாரண மனிதனை எப்படி மாற்றி விடுகிறது என்பதையும் வலுவாக பேசுகிறது.
காவல்துறையை மையமாக கொண்ட பல படங்கள் வந்திருந்தாலும், அதன் உள் கட்டமைப்பில் மனிதர்கள் எப்படி மாறுகிறார்கள் என்பதை மிக நேர்மையாக பதிவு செய்திருப்பதே ‘வாரண்ட்’ தொடரின் மிகப்பெரிய பலம். அதே சமயம், சில காட்சிகளில் வரும் அதிகப்படியான கெட்ட வார்த்தைகள் சற்று நெருடலை ஏற்படுத்துகிறது.
“வாரண்ட்” படத்திற்கு மதிப்பீடு 3.5/5
காவல்துறையின் சொல்லப்படாத பக்கத்தை யதார்த்தமாக பேசும் சுவாரஸ்யமான கிரைம் டிராமா





