“எங்கள் தங்கம்” பி.வி. நந்தினி ரெட்டி இயக்கத்தில் ராஜ் நிடிமாரு, சமந்தா ரூத் பிரபு, ஹுமாங்க் ரெட்டி தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன். இந்த படத்தில் சமந்தா ரூத், குல்ஷன் தேவய்யா, திகந்த் மஞ்சலே, கௌதமி, சைதன்யா கிருஷ்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
காதலித்து திருமணம் செய்துகொண்ட இளம் பெண்ணான சமந்தா, தனது கணவரின் குடும்பத்துடன் ஏற்பட்ட விரிசலை சரிசெய்யும் நோக்கில் அவருடன் சொந்த ஊருக்கு செல்கிறார். மரபுகளையும், கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்கும் அந்த குடும்பத்தினரின் அன்பைப் பெறுவதற்காக, தனக்குப் பழக்கமில்லாத பல விஷயங்களையும் செய்து அவர்களின் மனதை வெல்ல முயல்கிறார்.
அமைதியாக நகரும் இந்த குடும்பக் கதையில் எதிர்பாராத திருப்பமாக, சிறையில் இருந்து தப்பிய கொலை குற்றவாளி குல்ஷன் தேவய்யா சமந்தாவை தேடி வருகிறார். அவளை தன்னுடன் வரும்படி கட்டாயப்படுத்தும் அவர், மறுத்தால் குடும்பத்தையே அழித்துவிடுவதாக மிரட்டுகிறார். அதன் பின்னர் சமந்தாவின் வாழ்க்கை எப்படிப் புரண்டுபோகிறது? அவர் யார்? அவரின் மறைக்கப்பட்ட கடந்தகாலம் என்ன? என்பதற்கான பதில்களை அதிரடி மற்றும் உணர்ச்சி கலந்த திரைக்கதையுடன் படம் சொல்லுகிறது.
படத்தின் மிகப்பெரிய பலமாக சமந்தா திகழ்கிறார். ஆரம்பத்தில் சாதுவான குடும்பப் பெண்ணாக தோன்றும் அவர், ஆபத்து நேரத்தில் போராளியாக மாறும் விதம் ரசிகர்களை கவர்கிறது. ஆக்ஷன் காட்சிகளில் அவரது உடல்மொழி, தன்னம்பிக்கை மற்றும் திரை ஆளுமை மிகச் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அவர் காட்டும் வேகம் மற்றும் தீவிரம், கதாபாத்திரத்திற்கு தனித்துவமான வலிமையை அளிக்கிறது.
சமந்தாவின் கணவராக நடித்திருக்கும் திகந்த் மஞ்சாலே, குடும்ப உறுப்பினர்களாக நடித்த கெளதமி, ஆனந்த், ஸ்ரீ லட்சுமி, மன்ஜூஷா, சைதன்ய கிருஷ்ணா, ஸ்ரீமுகி உள்ளிட்ட அனைவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு தேவையான பங்களிப்பை சிறப்பாக வழங்கியுள்ளனர்.
எதிரணி கதாபாத்திரத்தில் வரும் குல்ஷன் தேவய்யா, வழக்கமான வில்லன் தோற்றத்தை விட கதையின் மர்மங்களை வெளிக்கொணரும் முக்கிய நபராக செயல்படுகிறார். அவரது நடிப்பு திரைக்கதைக்கு தேவையான பதற்றத்தை உருவாக்குகிறது.
ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், ஆக்ஷன் காட்சிகளை பிரமிப்பூட்டும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளார். சமந்தாவின் மாஸ் தருணங்களை ரசிகர்கள் ரசிக்கும் வகையில் அழகாக பதிவு செய்துள்ளார்.
சந்தோஷ் நாராயணனின் இசை படத்திற்கு உயிரூட்டுகிறது. பாடல்கள் கொண்டாட்ட உணர்வை ஏற்படுத்த, பின்னணி இசை ஆக்ஷன் மற்றும் உணர்ச்சி காட்சிகளுக்கு கூடுதல் தாக்கத்தை அளிக்கிறது.
கதை புதியதாக இல்லாவிட்டாலும், அதை குடும்ப பார்வையாளர்களும் பெண்களும் ரசிக்கும் வகையில் வடிவமைத்திருப்பது படத்தின் சிறப்பு. குடும்ப உறவுகள், மருமகள்-குடும்ப உறவுகளின் நகைச்சுவையான தருணங்கள் மற்றும் அதிரடி சம்பவங்களை சமநிலையுடன் இணைத்து திரைக்கதை நகர்கிறது.
இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி, முதல் பாதியில் குடும்ப நகைச்சுவையால் ரசிகர்களை மகிழ்வித்தாலும், இரண்டாம் பாதியில் அதிரடியை அதிகரித்து கதையை வேகமாக நகர்த்துகிறார். சமந்தாவை ஒரு புதிய கோணத்தில் ஆக்ஷன் நாயகியாக ரசிகர்கள் கொண்டாடும் வகையில் வடிவமைத்திருப்பது அவரது வெற்றியாகும்.
“எங்கள் தங்கம்” படத்திற்கு மதிப்பீடு 3.5/5
முழுமையான கமர்ஷியல் பொழுதுபோக்கு படம்





