துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே #DQ41 அப்டேட் ரசிகர்கள் உற்சாகம்!

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கும் புதிய பான் இந்தியா திரைப்படமான #DQ41, #SLV10 படத்தின் முக்கியமான படப்பிடிப்பு கட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்க, வெற்றி தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி  தலைமையிலான SLV Cinemas நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படம், மனித உணர்வுகளும் காதலும் கலந்த இனிமையான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி வருகிறது. துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே முதல் முறையாக இணைந்து நடிப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பனிமூட்டம் சூழ்ந்த மலைப்பகுதிகளில் நடைபெற்ற முக்கியமான படப்பிடிப்பு அட்டவணை சமீபத்தில் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளன. குளிர்கால உடையில் இயல்பான கவர்ச்சியுடன் தோன்றும் துல்கர் சல்மான் ரசிகர்களை கவர, ஸ்டைலிஷ் தோற்றத்தில் பூஜா ஹெக்டே அனைவரின் பார்வையையும் ஈர்த்துள்ளார்.

வெளியான புகைப்படங்கள் வழக்கமான போஸ் ஸ்டில்களாக இல்லாமல், படப்பிடிப்பு தளத்தில் பதிவு செய்யப்பட்ட இயல்பான தருணங்களாக அமைந்துள்ளன. ஒரு புகைப்படத்தில் மழைத்தூறலில் குடைகளை பிடித்தபடி சிரித்துக்கொண்டிருக்கும் துல்கர் மற்றும் பூஜா காணப்படுகின்றனர். மற்றொரு புகைப்படத்தில் பயணப் பைகள், கயிற்று பாலம் மற்றும் மலைப்பகுதி பிரார்த்தனை கொடிகள் இணைந்து ஒரு சுவாரஸ்யமான பயண உணர்வை ஏற்படுத்துகின்றன. மேலும், அடர்ந்த காட்டு பகுதியில் உள்ள கோவிலின் முன் முழு படக்குழுவும் ஒன்றாக நிற்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு ஒளிப்பதிவை அனய் ஓம் கோஸ்வாமி மேற்கொண்டு வருகிறார். இசையை ஜி.வி. பிரகாஷ் குமார் அமைக்க, காட்சியமைப்பை அவினாஷ் கொல்லா கவனித்து வருகிறார்.

பிரம்மாண்டமான பான் இந்தியா வெளியீடாக உருவாகி வரும் இந்த திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.