யோகி பாபு பிறந்தநாளில் நிறைவு பெற்ற “காகங்கள்” படப்பிடிப்பு!

மாயவரம் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘காகங்கள்’ திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தற்போது படம் இறுதிக்கட்ட பின்னணிப் பணிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இறுதி நாள் படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்ததையொட்டி, அதே தினம் நடிகர் யோகி பாபு தனது பிறந்தநாளையும் கொண்டாடியதால், படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் கேக் வெட்டி இரட்டை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த நிகழ்வு படக்குழுவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

‘காக்கா முட்டை’, ‘குற்றமே தண்டனை’ போன்ற கவனிக்கத்தக்க திரைப்படங்களுக்கு எழுத்தாளராக பணியாற்றிய ஆனந்த் அண்ணாமலை, இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு மற்றும் படத்தொகுப்பு உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை ஏற்றுள்ளார்.

இந்தப் படத்தில் கிஷோர், யோகி பாபு, விதார்த், லிஜோமோல் ஜோஸ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மனித வாழ்க்கையின் உணர்வுகள், ஆன்மிகப் பயணம் மற்றும் வித்தியாசமான திரைக்கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘காகங்கள்’, தற்போது டப்பிங், ஒலி வடிவமைப்பு, பின்னணி இசை, விஎஃப்எக்ஸ் மற்றும் டிஜிட்டல் இன்டர்மீடியட் (DI) உள்ளிட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.

புதுமையான கதைக்களத்துடன் தமிழ் திரையுலகில் தனித்துவமான படைப்பாக உருவாகும் ‘காகங்கள்’, விரைவில் திரையரங்குகளில் ரசிகர்களைச் சந்திக்க தயாராகி வருகிறது.

மேலும், படத்தின் அடுத்தகட்ட அப்டேட்கள், புதிய போஸ்டர்கள், டீசர் மற்றும் பிற விளம்பரப் பொருட்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.