மணிகண்டனின் மாஸ் அவதாரம்… “மக்கள் காவலன்” அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஆக்‌ஷன் மற்றும் உணர்வுபூர்வமான கதைக்களம் கலந்த திரைப்படமாக உருவாகும் ‘மக்கள் காவலன்’, வணிக ரீதியிலான பிரம்மாண்டத்தையும், சமூக அக்கறை கொண்ட கதையையும் ஒருங்கிணைக்கும் படைப்பாக உருவாகி வருகிறது.

‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ போன்ற வெற்றிப்படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் கே. மணிகண்டன், இந்தப் படத்தின் மூலம் தனது முதல் முழுநீள ஆக்‌ஷன் கதாநாயகனாக புதிய பரிமாணத்தில் தோன்றுகிறார்.

அறிமுக இயக்குநர் சந்தோஷ் குமார் எழுதி இயக்கும் இந்த திரைப்படம், நேர்மையாக வாழ விரும்பும் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. ஊழல் நிறைந்த அமைப்பை எதிர்கொள்ளும் சூழலில், சரணடைவதா அல்லது போராடுவதா என்ற கட்டாய முடிவை எடுக்க வேண்டிய நிலை அவனுக்கு ஏற்படுகிறது. தனிப்பட்ட போராட்டமாக தொடங்கும் அந்தப் பயணம், இறுதியில் மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக அவனை மாற்றுகிறது.

மணிகண்டனுடன் வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர்.கே. விஜய்முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா, ஜென்சன் திவாகர், லல்லு, ஜெமினி மணி, ரகு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு பிரதீபன் செல்வரத்தினம் ஒளிப்பதிவு செய்துள்ளார். அருள் மோசஸ் படத்தொகுப்பு, பாப்பநாடு சி. உதயகுமார் கலை இயக்கம், டான் அசோக் சண்டைக் காட்சிகள், ஆண்டனி ஜெயரூபன் ஒலியமைப்பு, சுரேஷ்குமார் ஆடை வடிவமைப்பு மற்றும் ராமச்சந்திரன் ஒப்பனை பணிகளை கவனித்துள்ளனர். இசையமைப்பாளராக நிவாஸ் கே. பிரசன்னா இணைந்துள்ளார்.

பிர்லா ஸ்டுடியோஸின் இணைத் தயாரிப்பாளர் சுனில் சைனானி கூறியதாவது:

“பைசன் காளமாடன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, மக்கள் காவலன் மூலம் நீலம் ஸ்டுடியோஸுடன் எங்களது கூட்டணியின் அடுத்த கட்டத்தைத் தொடங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். வலுவான, தனித்துவமான குரல் கொண்ட படைப்பாளிகளையும், ரசிகர்களுடன் ஆழமாக இணையும் கதைகளையும் தொடர்ந்து வழங்க வேண்டுமென்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தனது முதல் முழுநீள திரைப்படத்திலேயே இயக்குநர் சந்தோஷ் குமார் அந்தப் பார்வையை மிகத் தெளிவாக கொண்டு வந்துள்ளார். தமிழ் சினிமாவின் மிகவும் திறமையான நடிகர்களில் ஒருவரான கே. மணிகண்டன் இந்தப் படத்தில் நாயகனாக நடிப்பது எங்களுக்கு பெருமை. மக்கள் காவலன் வலிமையான, பொழுதுபோக்கான, அதே நேரத்தில் ஆழமான உணர்வுகளைத் தாங்கிய திரைப்படம். இப்படத்தை திரையரங்குகளில் ரசிகர்களிடம் கொண்டு செல்ல ஆவலுடன் இருக்கிறோம்.”

நீலம் ஸ்டுடியோஸின் சார்பில் பா. ரஞ்சித் மற்றும் அதிதி ஆனந்த் கூறியதாவது:

“மக்கள் காவலன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் மிகத் திறமையான இளம் எழுத்தாளர்-இயக்குநர்களில் ஒருவரான சந்தோஷ் குமாரை ரசிகர்களிடம் கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களுக்கு கிடைத்த மிகவும் உற்சாகமான திரைப்படங்களில் இதுவும் ஒன்று. மணிகண்டனின் அற்புதமான நடிப்பு இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும். அதேபோல், இயக்குநர்களின் பார்வையை மையமாகக் கொண்ட, பெரிய அளவில் உருவாகும் திரைப்படங்களை ஆதரிக்க வேண்டும் என்ற எங்களது நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளும் பிர்லா ஸ்டுடியோஸுடன் மீண்டும் இணைவதும் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.”

நடிகர் கே. மணிகண்டன் கூறியதாவது:

“மக்கள் காவலன் என்பது கலாச்சார மற்றும் இன மோதல்களை மையமாகக் கொண்ட தனித்துவமான ஆக்‌ஷன் டிராமா. இந்தக் கதையின் புதுமையும், நேர்மையும் என்னை உடனே கவர்ந்தது. அதுவே இந்தப் படத்தில் நடிக்க என்னைத் தூண்டியது. இது விறுவிறுப்பான, தீவிரமான, இன்றைய காலத்துக்கு மிகவும் பொருத்தமான திரைப்படம். சந்தோஷ் இந்தக் கதையை முதன்முதலாக சொன்னபோதே நான் முழுமையாக ஈர்க்கப்பட்டேன். இது எங்கள் அனைவரின் கனவு படம். நாங்கள் நினைத்தபடியே இந்தப் படம் உருவாகியிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.”

எழுத்தாளர் மற்றும் இயக்குநர் சந்தோஷ் குமார் கூறியதாவது:

“மக்கள் காவலன் எனது முதல் முழுநீள திரைப்படம். நான் சந்தித்த மனிதர்கள், நான் வாழ்ந்த அனுபவங்கள், நான் நேரில் கண்ட உண்மைகள் ஆகியவற்றின் தாக்கத்திலிருந்தே இந்தக் கதை உருவானது. அதிகார அமைப்புகளுக்குள் இருக்கும் படிநிலைகளையும், அதனால் உருவாகும் சமத்துவமின்மையையும் இந்தப் படம் பேசுகிறது. அதே நேரத்தில், அந்த அமைப்புக்குள் தனது நேர்மையை காப்பாற்ற போராடும் ஒரு மனிதனின் கதையையும் இது சொல்கிறது. இந்தக் கதாபாத்திரத்திற்கு தேவையான நேர்மையையும் தீவிரத்தையும் மணிகண்டன் மிகச் சிறப்பாக கொண்டு வந்துள்ளார். இந்தக் கதையை நம்பி, என் முதல் முழுநீள திரைப்படத்திற்கு வாய்ப்பு வழங்கிய பிர்லா ஸ்டுடியோஸுக்கும் நீலம் ஸ்டுடியோஸுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.”