“கரிகாலா”வாக களமிறங்கும் சந்தீப் கிஷன்… மிரளவைக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

‘ஷம்பாலா’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை தனித்துவமான கற்பனை உலகிற்கு அழைத்துச் சென்ற இயக்குநர் யுகேந்தர் முனி, தற்போது அதைவிட பிரம்மாண்டமான படைப்பாக ‘கரிகாலா’ திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். ஷைனிங் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த பான் இந்தியா சோஷியோ ஃபேண்டஸி படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். தயாரிப்பாளர்களாக மகிதர் ரெட்டி மற்றும் ராஜசேகர் அன்னபிமோஜு இணைந்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான கான்செப்ட் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பும், பிரம்மாண்டமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், அடர்ந்த மர்மக் காட்டில் குதிரை மீது வாளை ஏந்திய போர்வீரராக சந்தீப் கிஷன் காட்சியளிக்கிறார். அவருடன் கர்ஜித்தபடி பாய்ந்து வரும் சிங்கத்தின் தோற்றம், படம் சாகசமும் கற்பனையும் கலந்த வித்தியாசமான திரை அனுபவமாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.

தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகும் இந்த திரைப்படம், இந்திய நாட்டுப்புறக் கதைகள் மற்றும் சந்தமாமா உலகத்தின் கற்பனைச் சாயலை அடிப்படையாகக் கொண்டது. மந்திர சக்திகள், மறைந்த ராஜ்ஜியங்கள், வீரர்கள், சிங்கங்கள், ஓநாய்கள் மற்றும் புராண மரபுகள் நிறைந்த உலகத்தை நவீன தொழில்நுட்பத்துடன் திரையில் உயிர்ப்பிக்க படக்குழு முயற்சி செய்து வருகிறது.

இந்தப் படத்திற்காக சந்தீப் கிஷன் தனது திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத வகையில் முழுமையான தோற்ற மாற்றத்தை மேற்கொண்டுள்ளார். புதிய உடல்மொழி, சிறப்பு ஆடை அலங்காரம் மற்றும் போர்வீரர் தோற்றத்துடன் அவர் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தவுள்ளார்.

இரண்டு பாகங்களாக உருவாகும் ‘கரிகாலா’ திரைப்படத்தின் முதல் பாகம் 2027 ஜூலை 2-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இரண்டாம் பாகம் 2027 அக்டோபர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ஷம்பாலா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் யுகேந்தர் முனி, இன்னும் பெரிய அளவிலான உலகக் கட்டமைப்பு, அதிநவீன விஷுவல் எஃபெக்ட்ஸ், பிரம்மாண்ட தயாரிப்பு வடிவமைப்பு, அதிரடி சண்டைக் காட்சிகள் மற்றும் உணர்வுபூர்வமான கதையுடன் ‘கரிகாலா’வை உருவாக்கி வருகிறார்.

தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ள நிலையில், ‘கரிகாலா’ இந்திய சினிமாவின் முக்கியமான சோஷியோ ஃபேண்டஸி திரைப்படங்களில் ஒன்றாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.