“ராம் சரண் தேசிய விருது வெல்வார்!” – ‘பெத்தி’ குறித்து சிவராஜ்குமார் நம்பிக்கை

சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள “பெத்தி” திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள இந்த கிராமத்து ஆக்ஷன் திரைப்படத்தை புச்சி பாபு சனா இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்கும் இப்படத்தை, விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

ஏற்கனவே வெளியான பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், படம் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்த படத்தில் “கௌர்நாயுடு” என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிவராஜ்குமார், படத்தின் கதை மற்றும் தனது கதாபாத்திரத்தின் உணர்வுப்பூர்வமான பின்னணி தான் தன்னை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்துள்ளார். குறிப்பாக “பெத்தி” மற்றும் “கௌர்நாயுடு” இடையிலான பாசமும் உணர்ச்சி பந்தமும் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், ராம் சரண் குறித்து பெருமையாக பேசிய சிவராஜ்குமார், “இந்த படத்திற்காக ராம் சரண் தேசிய விருது வெல்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அந்த கதாபாத்திரத்திற்காக அவர் எடுத்த அர்ப்பணிப்பும் உடல் மாற்றமும் அளவிட முடியாதது. இரண்டு ஆண்டுகளாக முழுமையாக அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார்” என்று பாராட்டியுள்ளார்.

இயக்குநர் புச்சி பாபு சனா குறித்து பேசுகையில், “கதைக்கு தேவையான அனைத்தையும் திரையில் அசத்தலாக கொண்டு வந்துள்ளார். அவரது கதை சொல்லும் விதமும் மேக்கிங்கும் மிகவும் சிறப்பாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும் ஜகபதி பாபு  உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் வலுவாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒளிப்பதிவாளர் R. ரத்னவேலு உருவாக்கிய காட்சிகள் ரசிகர்களை மெய்மறக்கச் செய்யும் என்றும் சிவராஜ்குமார் கூறியுள்ளார்.

பல விளையாட்டுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், ஒவ்வொரு விளையாட்டும் கதையுடன் நெருக்கமாக இணைந்திருப்பதாகவும், குறிப்பாக கிளைமாக்ஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “பெத்தியின் பயணம் மிகவும் விசேஷமானது. அதை திரையரங்கில் அனுபவிக்க வேண்டும்” என ரசிகர்களை படம் பார்க்க அழைத்துள்ளார்.

தயாரிப்பாளர் சதீஷ் குறித்து பேசுகையில், உயர்ந்த தயாரிப்பு தரத்தில் மிகுந்த ஆர்வத்துடன் இப்படத்தை உருவாக்கியுள்ளார் என்றும் பாராட்டியுள்ளார். தற்போது ‘ஜெயிலர் 2’ மற்றும் “கும்மடி நரசய்யா” உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் சிவராஜ்குமார், நல்ல கதைகள் கிடைத்தால் மேலும் தெலுங்கு படங்களில் நடிக்க விருப்பம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சிவராஜ்குமார் பகிர்ந்துள்ள இந்த தகவல்கள் “பெத்தி” படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.