எம்.எஸ். பாஸ்கரை நெகிழ வைத்த “ப்ராமிஸ்”… ஜூன் 26 ரிலீஸ்!

“எனது வாழ்க்கையே ஒரு சத்திய சோதனை” என்று மகாத்மா காந்தி கூறியதுபோல், மனித வாழ்க்கையில் சத்தியம், உண்மை, அறம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘ப்ராமிஸ்’. குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய உணர்வுபூர்வமான படைப்பாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஜூன் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள அருண்குமார் சேகரன், இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ளார். நதியா சோமு கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சுஜன், அம்ரிஷ், பிரதாப், கோகுல், சுந்தரவேல், ராஜ்குமார், கலைவாணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மனித வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கட்டத்தில் எதிர்கொள்ளும் உண்மை மற்றும் சத்தியத்தின் சோதனைகளை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. கதாநாயகன் தனது வாழ்க்கையில் சந்திக்கும் சவால்கள் மற்றும் சத்தியத்திற்காக அவர் மேற்கொள்ளும் போராட்டங்கள் பார்வையாளர்களை சுவாரஸ்யமான பயணத்திற்கு அழைத்துச் செல்லும் என படக்குழு தெரிவித்துள்ளது.

வினோத் குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சரவண தீபன் இசையமைத்துள்ளார். பாடல்களை பாலா எழுதியுள்ளார். ஸ்ரீராம் விக்னேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் சேரன் மற்றும் ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நடராஜ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், ஏபி இன்டர்நேஷனல் யூடியூப் தளத்தில் வெளியான டிரெய்லர் பல லட்சம் பார்வைகளை பெற்று ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

வேலூர், ஓசூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட வடதமிழகப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்திற்கு தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ். பாஸ்கர் பின்னணிக் குரல் வழங்கியுள்ளார். படத்தின் காட்சிகளை பார்த்த அவர் நெகிழ்ந்து படக்குழுவை பாராட்டியதாக கூறப்படுகிறது.

என். நாகராஜ் வழங்க, அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், சங்கமித்ரன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘ப்ராமிஸ்’, குடும்ப உறவுகள், உண்மை மற்றும் மனிதநேய மதிப்புகளை வலியுறுத்தும் படைப்பாக உருவாகியுள்ளது.