“சிக்மா” வெளியானது – இயக்குநர் ஜேசன் சஞ்சய் எடுத்த முக்கிய முடிவு!

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மகாலக்‌ஷ்மி பேசுகையில், தனக்கு சிறப்பான கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் சஞ்சய் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார். மேலும், திரைப்படத்திற்கு ரசிகர்களும் பத்திரிகையாளர்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கலை இயக்குநர் பெஞ்சமின் கூறுகையில், இயக்குநர் சஞ்சய் ஆரம்பத்தில் கூறிய கதையை எந்தவித மாற்றமும் இல்லாமல் திரையில் கொண்டு வர முயற்சித்துள்ளதாக தெரிவித்தார். தனக்கு வழங்கப்பட்ட பணியை சிறப்பாக செய்திருப்பதாக நம்புவதாகவும், தனது குழுவினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

நடிகர் அன்புதாசன், இப்படத்தில் ‘கேஜி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக குறிப்பிட்டார். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் சஞ்சய், லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார்.

நடிகர் ஷிவ் பண்டிட் பேசுகையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக படத்திற்காக தாங்கள் மேற்கொண்ட உழைப்புக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தனக்கு வாய்ப்பு வழங்கிய இயக்குநர் சஞ்சய் மற்றும் லைகா நிறுவனத்திற்கும் நன்றியைத் தெரிவித்தார்.

நடிகை ஃபரியா அப்துல்லா, ரசிகர்களுடன் இணைந்து படத்தை பார்த்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்ததாக கூறினார். திரைப்படம் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தமிழ்குமரன் பேசுகையில், ‘சிக்மா’ திரைப்படத்திற்காக இயக்குநர் சஞ்சய் கடுமையாக உழைத்துள்ளதாக பாராட்டினார். தற்போது படம் ரசிகர்களின் கைகளில் சென்றுவிட்டதாகவும், அனைவரும் ஒன்றிணைந்து ஒரு நல்ல படைப்பை வழங்கியுள்ளோம் என்ற திருப்தி இருப்பதாகவும் கூறினார். மேலும், லைகா நிறுவனம் மூலம் சஞ்சயை இயக்குநராக அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்வதாக தெரிவித்தார்.

இயக்குநராக அறிமுகமாகியுள்ள ஜேசன் சஞ்சய் பேசுகையில், கடந்த மூன்று ஆண்டுகளாக தன்னுடன் பயணித்த லைகா நிறுவனத்திற்கும், படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார். ‘சிக்மா’ திரைப்படம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு தொடர்ந்து இயக்குநராக பயணிப்பதா அல்லது நடிப்பில் கவனம் செலுத்துவதா என்பது குறித்து முடிவு செய்ய இருப்பதாக கூறினார்.

மேலும், படம் பார்த்த தனது தாய், தங்கை மற்றும் குடும்பத்தினர் தன்னை வாழ்த்தியதாகவும் சஞ்சய் பகிர்ந்து கொண்டார்.