“மரகத நாணயம்” இரண்டாம் பாகம் – முக்கிய அப்டேட் கொடுத்த படக்குழு!

வித்தியாசமான கதை மற்றும் கற்பனை கலந்த திரைக்கதையால் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற திரைப்படங்களில் ‘மரகத நாணயம்’ படத்திற்கும் முக்கிய இடம் உண்டு. கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வெற்றிப்படமாக அமைந்தது. குறிப்பாக நடிகர் ஆதியின் கதாபாத்திரமும் நடிப்பும் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.

முதல் பாகம் வெளியாகி ஒன்பது ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அதன் இரண்டாம் பாகமான ‘மரகத நாணயம் 2’ உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய ஏ.ஆர்.கே. சரவனே இப்படத்தையும் இயக்கியுள்ளார். முதல் பாகத்தின் வெற்றியை மனதில் கொண்டு, இரண்டாம் பாகத்திலும் கதை மற்றும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதையடுத்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே ‘மரகத நாணயம் 2’ மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், படப்பிடிப்பு நிறைவு குறித்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

‘மரகத நாணயம் 2’ படத்தில் ஆதி, சத்யராஜ், பிரியா பவானி சங்கர், நிக்கி கல்ராணி பினிசெட்டி, முனீஷ்காந்த், ஆனந்த்ராஜ், டேனியல், அருண்ராஜா காமராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பேஷன் ஸ்டுடியோஸ், டங்கல் டிவி, ஆர்டிசி மீடியா, ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் குட் ஷோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. சுதன் சுந்தரம், மணிஷ் சிங்கால், துர்காராம் செளத்ரி, தேவ் மற்றும் கே.வி. துரை ஆகியோர் தயாரிப்பாளர்களாக உள்ளனர்.

தற்போது இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இசை வெளியீடு, டிரெய்லர் மற்றும் உலகளாவிய திரையரங்க வெளியீட்டு தேதி தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.