மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் உருவாகி வரும் ‘மாகாளி’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. படத்தின் அறிவிப்பு வெளியாகி சில நாட்களிலேயே படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு, திட்டமிட்ட காலக்கட்டத்துக்கு முன்னதாகவே முதல் கட்ட பணிகளை முடித்துள்ளது. தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மாரி செல்வராஜின் இணை இயக்குநராக பணியாற்றிய எஸ்.பி. அரவிந்த், ‘மாகாளி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அவரே இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். அமீர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம், சமூகத்தில் நிலவும் முக்கியமான பிரச்சினையை மையமாகக் கொண்டு அழுத்தமான கதைக்களத்தில் உருவாகி வருகிறது.
வேலூர் மற்றும் இராணிப்பட்டி பகுதிகளில் நடைபெற்ற முதல் கட்ட படப்பிடிப்பு திட்டமிட்டதைவிட விரைவாக நிறைவடைந்துள்ளது. சமூக அக்கறையுடன் உருவாகும் இப்படம், மனிதர்களுக்கு இடையேயான உறவுகள், அவர்களின் உணர்வுகள் மற்றும் அதற்குள் ஏற்படும் போராட்டங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் வெளியான ‘மாகாளி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. அதில் இடம்பெற்றிருந்த அமீரின் தோற்றம் மற்றும் படத்தின் மையக்கரு குறித்த எதிர்பார்ப்பு, திரைப்படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இப்படத்தில் அமீருடன் ஸ்வாசிகா, அனிஷ்மா, ஹரிஹரன், அஸ்வின் ராம் மற்றும் லெனின் பாரதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரதீபன் செல்வரத்தினம் ஒளிப்பதிவு செய்ய, செல்வா RK படத்தொகுப்பை கவனிக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ராமு தங்கராஜ் கலை இயக்கத்தையும், திலீப் சுப்பராயன் சண்டைப் பயிற்சியையும் மேற்கொள்கின்றனர்.
ஐங்கரன் இண்டர்நேஷனல் சார்பில் K. கருணாமூர்த்தி, நவ்வி ஸ்டுடியோஸ் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ் மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அறிவிப்பு வெளியான குறுகிய காலத்திலேயே படப்பிடிப்பில் வேகம் காட்டி வரும் ‘மாகாளி’, அடுத்தடுத்த அப்டேட்களுக்கான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.





