மூச்சை அடக்கி சாதனை… “ஸ்ட்ரீட் ஃபைட்டர்” நிகழ்வில் வித்யுத் ஜம்வாலின் வியக்க வைக்கும் சம்பவம்!

மும்பையில் நடைபெற்ற ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் சிறப்பு நிகழ்வில் நடிகர் வித்யுத் ஜம்வால் தனது அசாத்திய யோகா திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். சுமார் 15 நிமிடங்கள் மூச்சை அடக்கி தியானம் செய்த அவர், ரசிகர்கள் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் கவனத்தை ஈர்த்தார்.

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகும் வித்யுத் ஜம்வால், இதில் தால்சிம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல கேமிங் கதாபாத்திரமான தால்சிமின் திறமைகள் யோகா மற்றும் இந்தியாவின் பாரம்பரிய தற்காப்புக் கலையான களரிப்பயட்டு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை.

நிகழ்ச்சியில் தால்சிம் கதாபாத்திரம் குறித்தும், அந்த வேடத்திற்கு தான் எவ்வாறு தயாரானார் என்பது குறித்தும் வித்யுத் ஜம்வால் பேசினார். தொடர்ந்து, தால்சிம் வேடத்தில் வந்த காஸ்பிளேயர்களுடன் மேடையில் அமர்ந்து 15 நிமிடங்கள் தியானத்தில் ஈடுபட்டார். இதன் மூலம் யோகா மற்றும் மூச்சுப் பயிற்சியில் தனக்குள்ள திறமையை அவர் நேரடியாக நிரூபித்தார்.

தியானத்தை நிறைவு செய்த பிறகு பேசிய வித்யுத் ஜம்வால், பதஞ்சலி யோக சூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பிரத்யேக நுட்பத்தைப் பயன்படுத்தியதாக தெரிவித்தார். இந்தப் பயிற்சியின் மூலம் நீண்ட நேரம் மூச்சை கட்டுப்படுத்த முடிவதோடு, வாழ்க்கையில் பல்வேறு இலக்குகளை அடைவதற்கும் அது உதவுவதாக அவர் கூறினார்.

மேலும், இந்த நுட்பத்தை இளம் தலைமுறையினரிடமும் கொண்டு சேர்த்து வருவதாக வித்யுத் தெரிவித்தார். எதையும் உடனடியாக அடைய வேண்டும் என்ற அவசரத்தை தவிர்த்து, பொறுமையுடன் தொடர்ந்து முயற்சி செய்வது முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

வாழ்க்கையில் முன்னேறுவதற்கு சில நேரங்களில் எதையும் செய்யாமல் அமைதியாக இருப்பதற்கான திறமையும் அவசியம் என்றும், பொறுமை மற்றும் தொடர்ச்சியான முயற்சி ஒருவரை வெகுதூரம் அழைத்துச் செல்லும் என்றும் வித்யுத் ஜம்வால் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

பாரமவுண்ட் பிக்சர்ஸ் வெளியிடும் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படம் வரும் அக்டோபர் 16-ம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகிறது. ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.