லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்புடன் பயணித்து வருகிறது. படத்திற்கு கிடைத்து வரும் நேர்மறையான விமர்சனங்களும் ரசிகர்களின் வாய் வழிப் பாராட்டுகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நாளுக்கு நாள் திரையரங்குகளில் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
ஆக்ஷன், அட்வென்ச்சர் மற்றும் ஹெய்ஸ்ட் அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படத்தின் மூலம் ஃபரியா அப்துல்லா தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். முதல் படமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பது அவரது தமிழ் திரைப்பயணத்திற்கு கூடுதல் சிறப்பை சேர்த்துள்ளது. சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா மற்றும் அறிமுக இயக்குநர் ஜேசன் சஞ்சய் என இளம் திறமைகள் இணைந்துள்ளதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
‘சிக்மா’ மூலம் தமிழில் அறிமுகமானது குறித்து ஃபரியா அப்துல்லா கூறுகையில், ஜேசன் சஞ்சயுடன் பணியாற்றியது சிறப்பான அனுபவமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். தான் உருவாக்க விரும்பிய விஷயங்கள் குறித்து ஜேசன் சஞ்சய் தெளிவான பார்வையுடனும் நம்பிக்கையுடனும் செயல்பட்டதாகவும், அவரது அமைதியான அணுகுமுறை படக்குழுவினருக்கு உற்சாகத்தை அளித்ததாகவும் கூறியுள்ளார். தமிழில் தனது முதல் படமே ரசிகர்களின் நேர்மறையான வரவேற்பைப் பெற்று வருவது இந்தப் பயணத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றியுள்ளதாகவும் ஃபரியா தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் வளர்ந்த ஃபரியா, நடிப்புடன் மட்டுமின்றி நடனம், நாடகம், ராப் இசை மற்றும் திரைப்பட உருவாக்கம் என பல்வேறு படைப்புத் துறைகளிலும் தொடர்ந்து இயங்கி வருகிறார். சிறு வயது முதலே நடனத்தில் ஆர்வம் கொண்ட இவர், ஸ்டுடியோ மற்றும் ஸ்ட்ரீட் டான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நடன முறைகளில் பயிற்சி பெற்றுள்ளார். பின்னர் மாஸ் கம்யூனிகேஷன் படித்ததுடன், ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நாடகம் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பயிற்சி பெற்றுள்ளார்.
நடிப்புக்கு இணையாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ராப் பாடல்களை எழுதி பாடி வரும் ஃபரியா, இசை வீடியோக்களை இயக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் ஒரு இசை வீடியோவை தயாரித்ததன் மூலம் கேமராவுக்கு பின்னாலும் தனது படைப்புப் பயணத்தை விரிவுபடுத்தியுள்ளார்.
2021-ம் ஆண்டு வெளியான ‘ஜதி ரத்னலு’ திரைப்படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான ஃபரியா, அப்படத்தின் வெற்றியால் ரசிகர்களிடம் பிரபலமானார். தொடர்ந்து ‘மது வடலரா 2’, ‘ஆ ஒக்கட்டி அடக்கு’, ‘குர்ராம் பாப்பி ரெட்டி’, ‘கயாபடா சிம்ஹம்’, ‘ராவணசுறா’, ‘லைக் ஷேர் சப்ஸ்கிரைப்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், சோனிலிவ் ஓடிடி தளத்தின் ‘தி ஜென்காபுரு கர்ஸ்’ வெப் சீரிஸ் மூலம் இந்தி திரையுலகிலும் அறிமுகமானார்.
‘சிக்மா’ படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் சுசீந்திரன் இயக்கும் ‘வள்ளிமயில்’ படத்திலும் ஃபரியா நடித்துள்ளார். இதனால், தமிழ் திரையுலகில் அடுத்தடுத்த படங்களின் மூலம் தனது பயணத்தை தொடர உள்ளார்.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள ‘சிக்மா’வில் சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்புதாசன், யோக் ஜேபி, மகாலட்சுமி, ஷீலா ராஜ்குமார், கமலேஷ் மற்றும் கிரண் கொண்டா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள இப்படத்திற்கு தமன் எஸ். இசையமைத்துள்ளார். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவையும், பிரவீன் கே.எல். படத்தொகுப்பையும் மேற்கொண்டுள்ளனர். சஞ்சீவ் கிரியேட்டிவ் புரொடக்ஷனை கவனித்துள்ளார்.





