மறைந்த பழம்பெரும் நடிகரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான அல்லு ராமலிங்கய்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் அல்லு அர்ஜுன் தனது புதிய அலுவலகமான ‘ICONZA’வை திறந்துள்ளார்.
எளிமையான முறையில் நடைபெற்ற அலுவலக தொடக்க விழாவில், அல்லு அர்ஜுனின் குடும்பத்தினர் கலந்து கொண்டு சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். விழா தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த அல்லு அர்ஜுன், தனது தாத்தாவின் கலைப் பாரம்பரியத்தை தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில் ‘ICONZA’ செயல்படும் என தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவில் தனக்கென தனி இடத்தை உருவாக்கிய அல்லு ராமலிங்கய்யா, 50 ஆண்டுகளுக்கும் மேலான தனது திரைப்பயணத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். அவரது பிறந்தநாளில் ‘ICONZA’வை தொடங்கியிருப்பதன் மூலம், குடும்பத்தின் திரைக்கலை மரபை புதிய படைப்பாற்றல் தளத்தில் முன்னெடுக்கிறார் அல்லு அர்ஜுன்.
புதிய சிந்தனைகள், படைப்பாற்றல் மற்றும் கலைஞர்களின் கூட்டுப் பணிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ‘ICONZA’ உருவாக்கப்பட்டுள்ளது. நடிப்பைத் தாண்டி பல்வேறு கலைத் துறைகளில் தனது பயணத்தை விரிவுபடுத்தி வரும் அல்லு அர்ஜுனுக்கு, இந்த அலுவலகம் மற்றொரு முக்கியமான அத்தியாயமாக அமைந்துள்ளது.
இதனிடையே, அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராக்கா’ திரைப்படத்திற்காக அல்லு அர்ஜுன் தீவிரமாக தயாராகி வருகிறார். சமீபத்தில் இந்தப் படம் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்து கவனம் பெற்றது. இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘AA23’ படத்திலும், அதன் பின்னர் ‘புஷ்பா 3: தி ரேம்பேஜ்’ படத்திலும் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளார்.





