சென்னை ராயப்பேட்டையில் உள்ள சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் பயிற்சி மையத்தில், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களின் திரைப்பயணம் முதல் அரசியல் பயணம் வரை இடம்பெற்ற முக்கிய தருணங்களை சித்தரிக்கும் வகையில், சென்னைஸ் அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் காய்கறி மற்றும் பழங்களில் உருவச்சிற்பங்களை செதுக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர்.
இந்த சிறப்பு நிகழ்ச்சி, சென்னைஸ் அமிர்தா கல்விக்குழுமங்களின் நிறுவன தலைவர் பூமிநாதன் மற்றும் முதலமைச்சர் விஜய்யின் நண்பரும் நடிகருமான சஞ்சீவ் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை கௌரவிக்கும் விதமாக நடைபெற்ற இந்த கண்காட்சியில், அவர் கதாநாயகனாக அறிமுகமான நாளைய தீர்ப்பு திரைப்படம் முதல் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வரையிலான அவரது திரைப்பயணத்தை பிரதிபலிக்கும் 69 சிற்பங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த சிற்பங்களை சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்கள் 10 நாட்கள் கடின உழைப்பின் மூலம் உருவாக்கியுள்ளனர். காய்கறி மற்றும் பழங்களில் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டிருந்த இந்த சிற்பங்கள் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன.
இந்த கண்காட்சியை பார்வையிட்ட நடிகர் சஞ்சீவ், மாணவர்களின் கலைத் திறனையும் அர்ப்பணிப்பையும் மனதார பாராட்டினார். மேலும், மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்காக பல்வேறு புதுமையான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் சென்னைஸ் அமிர்தா கல்விக்குழுமங்களின் நிறுவனர் பூமிநாதனுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
சென்னைஸ் அமிர்தா கல்விக்குழும நிறுவனர் திரு. பூமிநாதன் உரையாற்றுகையில், ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் ஏவியேஷன் துறையில் மிகச்சிறப்பான பங்களிப்பை வழங்கி, சர்வதேச அளவில் பெருநிறுவனங்களில் மாணவர்களை கொண்டு சேர்ப்பதில் தங்கள் நிறுவனம் சமரசம் இன்றி செயல்படுவதாக தெரிவித்தார். மேலும் இது போன்று மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தி கவனம் பெறச் செய்யும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவதில் பெருமை கொள்வதாகவும் அவர் கூறினார்.
முதலமைச்சர் விஜய்யின் சாதனைகளை கௌரவிக்கும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, சென்னைஸ் அமிர்தா மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் திறமைகளை வெளிப்படுத்திய சிறப்பான நிகழ்வாக அமைந்தது.






