மக்களின் உடல்நலத்தை கேள்விக்குள்ளாக்கும் பிரச்சினையை பேசும் “தி இந்தியா ஸ்டோரி”

சமூக மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘தி இந்தியா ஸ்டோரி’. நடிகை காஜல் அகர்வால் மற்றும் நடிகர் ஷ்ரேயாஸ் தல்படே முதன்முறையாக இணைந்து நடித்துள்ள இப்படம், வரும் ஜூலை 24 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தை இயக்குநர் சேட்டன் DK இயக்கியுள்ள நிலையில், சாகர் B ஷிண்டே கதை எழுதி தயாரித்துள்ளார். சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கிய பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், ஏற்கனவே திரையுலக வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

‘தி இந்தியா ஸ்டோரி’ The India Story (அல்லது The India Story: Slow Poison) என்ற பெயரிலும் அறியப்படும் இப்படம், குறிப்பாக பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சர்ச்சைகளை வெளிச்சமிட்டு காட்டுகிறது. ஒரு குடும்பத்தின் கதையை மட்டுமே கூறாமல், பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக இந்த விவகாரத்தை இக்கதை விரிவாக எடுத்துரைக்கிறது. மேலும், இந்த நிலைமையைத் தடுப்பதற்கான கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சட்டங்கள் தேவையென்பதையும் இப்படம் சுட்டிக்காட்டுகிறது.

இப்படம் உருவானதற்கான காரணத்தைப் பற்றி தயாரிப்பாளர் சாகர் B ஷிண்டே கூறியதாவது..,
“நாட்டின் பல பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியும் பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு உண்மையை இந்தக் கதை வெளிப்படுத்துகிறது. பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல, மனித வாழ்வையே பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சினை. இந்த படத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொறுப்புணர்வை உருவாக்கவும் நாங்கள் விரும்புகிறோம்.”

இயக்குநர் சேட்டன் DK கூறியதாவது..,

“இந்தக் கதைக்கு உண்மைத்தன்மையை கொடுக்க குழுவில் உள்ள ஒவ்வொருவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். காஜல் மற்றும்  ஷ்ரேயாஸ்  இருவரும் மிகவும் நுணுக்கமான நடிப்பை வழங்கியுள்ளனர். அவர்கள் காட்டிய ஈடுபாடு படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.”

பல வெற்றிப் படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் தனது திறமையை நிரூபித்துள்ள காஜல் அகர்வாலும், வித்தியாசமான கதாபாத்திரங்களின் மூலம் பாராட்டுகளை பெற்றுள்ள ஷ்ரேயாஸ் தல்படேயும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளதால், இந்த புதிய கூட்டணி ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் இணை தயாரிப்பாளர்களாக ஸ்வாதி வினாயக் சைன்டானே, அனிதா ஜாதவ், விநாயக் சைதானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

மேலும், ஒளிப்பதிவை நிஷாந்த் பக்வத், இசையை மங்கேஷ் தாக்டே, படத்தொகுப்பை ஆஷிஷ் மாத்ரே, பாடல் வரிகளை ஷகீல் அஜாமி, ஒலி வடிவமைப்பை அன்மோல் பாவே ஆகியோர் கவனித்துள்ளனர்.

சமூக பொறுப்புணர்வை தூண்டும் கருத்துகளுடன் உருவாகியுள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’, சினிமாவைத் தாண்டி முக்கியமான விவாதங்களை உருவாக்கும் படைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Zee Studios நிறுவனம் இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறது.