மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனையொட்டி புதிய வெளியீட்டு தேதி போஸ்டரும் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
காதல் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கியமான கதாபாத்திரத்தில் இடம்பெற்றுள்ளார்.
‘ஹிருதயம்’, ‘குஷி’, ‘ஹாய் நானா’ உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த ஹேஷாம் அப்துல் வஹாப், இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அவரது இசையில் உருவான பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்களிடையே ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
படத்தின் ஒளிப்பதிவை அரவிந்த் விஸ்வநாதன் மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை ராஜ் கமல், ஆடை வடிவமைப்பை நவா ராஜ்குமார் கவனித்துள்ளனர். இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் யுவராஜ் கணேசன் தயாரித்துள்ளார்.
முன்னதாக வெளியான டைட்டில் டீசர், ‘இந்திரா’, ‘வா கண்ணம்மா’ ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. தற்போது வெளியாகியுள்ள ரிலீஸ் தேதி அறிவிப்பு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
புதிய கூட்டணியான அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர், சோனா ஒலிக்கலின் முக்கிய கதாபாத்திரம் மற்றும் ஹேஷாம் அப்துல் வஹாபின் இசை ஆகிய அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘ஒன்ஸ்மோர்’, ஆகஸ்ட் 28 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரசிகர்களை சந்திக்க தயாராக உள்ளது.





