கர்ணனாக களமிறங்கும் ராகவா லாரன்ஸ் – பிரம்மாண்டமாக உருவாகும் “மஹாவீர் கர்ணா”!

மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவரான கர்ணனின் வீரமும், வாழ்வும், உணர்வுகளும் மையமாகக் கொண்டு உருவாகிறது புதிய பிரம்மாண்ட திரைப்படம் ‘மஹாவீர் கர்ணா’. பென் மூவீஸ் சார்பில் ஜெயந்திலால் கடா வழங்கும் இப்படத்தை, ஆர்வி ஸ்டூடியோஸ் மற்றும் ஸ்ரீ நீலாத்ரி புரொடக்‌ஷன்ஸ் இணைந்து மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கின்றன.

கர்ணன் கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க, இப்படத்தை இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்குகிறார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட உள்ளது.

மகாபாரதத்தில் தனக்கென தனித்துவமான இடத்தைப் பெற்ற கர்ணனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில், அவரது வீரத்துடன் இணைந்த கௌரவம், நட்பு மற்றும் விசுவாசம், தியாகம், விதியுடனான போராட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அழுத்தமாக பதிவு செய்யப்பட உள்ளன.

பிரம்மாண்டமான செட்கள், புராண காலத்தை பிரதிபலிக்கும் கலை வடிவமைப்புகள், பிரமிக்க வைக்கும் போர்க்களக் காட்சிகள் மற்றும் சர்வதேச தரத்திலான VFX தொழில்நுட்பம் என திரைப்படத்தின் காட்சியமைப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பார்வையாளர்களுக்கு கர்ணனின் உலகத்தை நேரில் காண்பது போன்ற பிரம்மாண்டமான திரை அனுபவத்தை வழங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

கர்ணனின் வாழ்க்கையில் இடம்பெற்ற வீரச் சம்பவங்கள் மட்டுமின்றி, அவரது உறவுகள், கொள்கைகள், விசுவாசம் மற்றும் தியாகம் ஆகியவற்றையும் உணர்வுப்பூர்வமான திரைக்கதையின் வழியாக வெளிப்படுத்த இயக்குநர் ரமேஷ் வர்மா முயற்சித்து வருகிறார்.

இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

மகாபாரதத்தில் காலம் கடந்தும் பேசப்படும் மாவீரன் கர்ணனின் கதையை நவீன தொழில்நுட்பத்தின் துணையுடன் பிரம்மாண்ட திரை வடிவில் கொண்டு வரவுள்ள ‘மஹாவீர் கர்ணா’, உலகம் முழுவதும் 2027-ம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகிறது.