ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குநர் வி. அருண்குமார் (எ) அட்லீ இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கலாநிதி மாறன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘ராக்கா’. இந்திய சினிமாவின் தொழில்நுட்பத் துறையில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ள இப்படம், தற்போது கின்னஸ் உலக சாதனை பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது.
ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான கலைஞர்களை நிகழ்நேரத்தில் (Real-Time) Motion Capture செய்ததற்காக ‘ராக்கா’ திரைப்படத்திற்கு கின்னஸ் உலக சாதனை அங்கீகாரம் கிடைத்துள்ளது. கடந்த பிப்ரவரி 2026-ல் நடைபெற்ற இந்த முயற்சியில், ஒரே நேரத்தில் 37 கலைஞர்களின் நடிப்பை Motion Capture தொழில்நுட்பம் மூலம் பதிவு செய்து இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ கின்னஸ் அங்கீகாரம் செப்டம்பர் 15, 2026 அன்று வழங்கப்பட்டது.
இதையடுத்து, கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி படக்குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. கின்னஸ் உலக சாதனையின் மூத்த நடுவர் ஸ்வப்னில் டாங்ரிகர், அதிகாரப்பூர்வ சான்றிதழை நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் அட்லீ ஆகியோரிடம் வழங்கினார். இப்படத்தின் முக்கிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த சாதனை குறித்து அல்லு அர்ஜுன் கூறுகையில்..,
“சினிமாவின் எல்லைகளை விரிவுபடுத்தி, உலக அளவில் புதிய அளவுகோலை உருவாக்கும் இந்த குறிப்பிடத்தக்க சாதனையை நினைத்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். இது ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் பெருமையான தருணம். இந்த சாதனையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து எங்களது முயற்சிகளை கௌரவித்த கின்னஸ் உலக சாதனை நிறுவனத்திற்கு நன்றி.
எனது இயக்குநர் அட்லீயின் தொலைநோக்கு பார்வையும் வழிகாட்டுதலும், ஒட்டுமொத்த படக்குழுவினரின் அசாத்திய உழைப்பும் இல்லாமல் இந்த சாதனை சாத்தியமாகியிருக்காது. இவ்வளவு பிரம்மாண்டமான கனவுடன் உருவாகும் இந்தப் படைப்பிற்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி. இது எங்கள் அனைவருக்கும் மிகவும் சிறப்பான தருணம்” என்றார்.
இயக்குநர் அட்லீ கூறுகையில்..,
“சிறுவயதில் கின்னஸ் உலக சாதனைகள் குறித்து மிகுந்த ஆச்சரியத்துடன் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒரு நாள் நாமே ஒரு சாதனையைப் படைப்போம் என்று அப்போது நினைத்துக்கூட பார்த்ததில்லை.
ஒரே படப்பிடிப்பில் 37 Motion Capture Assets-ஐ ஒன்றிணைத்து இந்த அங்கீகாரத்தைப் பெற்றிருப்பது எனக்கு இன்னும் கனவு போலவே இருக்கிறது. இது மிகவும் மகிழ்ச்சியையும் பணிவையும் அளிக்கிறது. நாம் பெரிய கனவு கண்டு, முழுமையான நம்பிக்கையுடன் ஒன்றிணைந்து உழைத்தால், சில நேரங்களில் சாத்தியமற்றதாகத் தோன்றுவதையும் சாத்தியமாக்க முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணமாக இருக்கும்.
இறைவனின் அருளால் இந்தக் கனவில் நம்பிக்கை வைத்து, அதை நனவாக்கிய எனது ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் மனமார்ந்த நன்றி” என்றார்.
‘ராக்கா’ படத்திற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த பிரம்மாண்டமான Motion Capture பணியில் 4 வயது குழந்தை முதல் 70 வயது முதியவர் வரை வெவ்வேறு வயதுகளைச் சேர்ந்த 37 கலைஞர்கள் ஒரே அமர்வில் பங்கேற்றுள்ளனர். ஒரே Capture Volume-க்குள் 37 பேரின் தனித்தனி நடிப்பையும் ஒரே நேரத்தில் பதிவு செய்து, ஒவ்வொருவரின் Performance-ன் தனித்தன்மையும் பாதிக்கப்படாமல் பாதுகாப்பது இந்த முயற்சியில் மிகப்பெரிய சவாலாக இருந்துள்ளது.
இந்தப் பணிக்காக படத்தின் VFX குழு, ‘ராக்கா’ திரைப்படத்தின் காட்சித் தேவைகளுக்கு ஏற்ப பிரத்யேகமான Motion Capture Pipeline மற்றும் Workflow-ஐ உருவாக்கியுள்ளது. கின்னஸ் சாதனை முயற்சிக்காக மொத்தம் 92 ஆப்டிக்கல் Motion Capture கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதனுடன் Capture, Calibration, Networking, Synchronisation, Real-Time Unreal Visualisation, Witness Cameras மற்றும் Facial Capture உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு இந்த முயற்சி செயல்படுத்தப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பு, அட்லீயின் தொலைநோக்கு சிந்தனை, அல்லு அர்ஜுனின் அர்ப்பணிப்பு, Apple Art Studio-வின் தொழில்நுட்ப பங்களிப்பு, மேம்பட்ட VFX பணிகள் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவின் ஒருங்கிணைந்த உழைப்பு ஆகியவை இந்த சாதனை உருவாக முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
‘ராக்கா’ திரைப்படம் பெற்றுள்ள இந்த கின்னஸ் அங்கீகாரம், இந்திய சினிமாவின் படைப்பாற்றல் மட்டுமின்றி, அதன் வளர்ந்து வரும் தொழில்நுட்ப திறனையும் உலக அளவில் எடுத்துக்காட்டும் முக்கிய சாதனையாக அமைந்துள்ளது. நவீன திரைப்படத் தயாரிப்பில் இந்திய கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளுக்கு இது மற்றுமொரு சான்றாக பார்க்கப்படுகிறது.
இதன் மூலம், ‘ராக்கா’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே உலக அரங்கில் இந்திய சினிமாவின் தொழில்நுட்ப வலிமையை வெளிப்படுத்தும் முக்கிய சாதனையை பதிவு செய்துள்ளது.





