‘பிரபாஸ் ஒரு சிறந்த மனிதர்’ – “ஃபௌசி” நடிகர் ஜிதின் குலாட்டி புகழாரம்!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்ட படங்களில் நடித்து இந்திய அளவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வருகிறார். அந்த வகையில், தற்போது இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஃபௌசி’ திரைப்படத்தில் நடிகர் ஜிதின் குலாட்டியுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், பிரபாஸுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைந்து பணியாற்றி வரும் அனுபவம் குறித்து ஜிதின் குலாட்டி, Variety India-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.

பிரபாஸ் மிகவும் அன்பானவர், தாராள மனம் கொண்டவர் என அவரைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருந்ததாகவும், அவருடன் இணைந்து பணியாற்றத் தொடங்கிய பிறகு அந்த தகவல்கள் அனைத்தும் உண்மை என்பதை நேரடியாக உணர்ந்ததாகவும் ஜிதின் குலாட்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பிரபாஸ் மற்றவர்களுக்கு உதவுவதில் எப்போதும் முனைப்புடன் இருப்பவர் என்றும், உதவி என்று யார் அணுகினாலும் அவர்களுக்குத் தன்னால் முடிந்ததை செய்யக்கூடியவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருடன் படப்பிடிப்பில் இருந்தபோது, தன்னைச் சுற்றியுள்ள பலருக்கும் பிரபாஸ் உதவி செய்வதை நேரில் பார்த்து வியந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பிரபாஸின் எளிமை மற்றும் மனிதநேயத்தைப் பற்றி பேசிய ஜிதின் குலாட்டி, அவரது வீட்டில் தயாரிக்கப்படும் உணவையும் சுவைத்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக பிரபாஸ் வீட்டில் சமைக்கப்படும் மட்டன் தனக்கு மிகவும் பிடித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

“பிரபாஸ் வீட்டில் சமைக்கப்படும் உணவுக்கும் தனி பெயர் இருக்கிறது. அவரது வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவை நானும் சாப்பிட்டிருக்கிறேன். குறிப்பாக அங்கு சமைக்கப்படும் மட்டன், நான் இதுவரை சாப்பிட்டதிலேயே மிகவும் சிறந்தது. இதை நான் பெரிதுபடுத்தி சொல்லவில்லை; உண்மையிலேயே சாப்பிட்டு ரசித்த அனுபவத்தில் சொல்கிறேன்” என ஜிதின் குலாட்டி தெரிவித்துள்ளார்.

ஜிதின் குலாட்டியின் முழுமையான பேட்டி – Variety India

பிரபாஸ் மற்றும் ஜிதின் குலாட்டி இணைந்து நடித்து வரும் ‘ஃபௌசி’ திரைப்படம் மீதும் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. பிரம்மாண்டமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இப்படம், பிரபாஸின் திரைப்பயணத்தில் மற்றொரு முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ‘சலார்’, ‘கல்கி 2898 AD’, ‘தி ராஜா சாப்’ உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து பெரிய படங்களில் நடித்து வரும் பிரபாஸ், தனது படங்களின் மூலம் இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில், அவருடன் நீண்ட காலம் இணைந்து பணியாற்றிய ஜிதின் குலாட்டி, அவரது நட்சத்திர அந்தஸ்தை மட்டுமின்றி, தனிப்பட்ட முறையில் அவரது மனிதநேயத்தையும் பாராட்டியிருப்பது ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.