மோகன்லாலின் L367 படத்திற்கு “ஆபரேஷன் கங்கா” – பிரம்மாண்டமாக தயாராகும் படம்!

மோகன்லால் நடிப்பில், இயக்குநர் விஷ்ணு மோகன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் L367 திரைப்படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயரிடப்பட்டுள்ளது. ஸ்ரீ கோகுலம் மூவீஸ் நிறுவனம் சார்பில் கோகுலம் கோபாலன் இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்திற்கு விஷ்ணு மோகன் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். பைஜு கோபாலன் மற்றும் வி.சி. பிரவீன் இணை தயாரிப்பாளர்களாகவும், கிருஷ்ணமூர்த்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பை ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்தனர். அந்த எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது ‘ஆபரேஷன் கங்கா’ என்ற தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஷ்ணு மோகன் இயக்கும் மூன்றாவது திரைப்படம் இது. இயக்குநராக அவர் அறிமுகமான ‘மேப்படியான்’ திரைப்படம் தேசிய விருதை வென்று கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா – உக்ரைன் போர் நடைபெற்ற காலகட்டத்தில், உக்ரைனில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்பதற்காக இந்திய அரசு மேற்கொண்ட ‘ஆபரேஷன் கங்கா’ மீட்புப் பணியை மையக்கருவாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியுள்ளது. மோகன்லால் விரைவில் படப்பிடிப்பு தளத்தில் இணைகிறார். சுமார் 180 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், போலந்து, ஜார்ஜியா, கஜகஸ்தான், டெல்லி, டேராடூன் மற்றும் கொச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

இப்படத்தில் மோகன்லாலுடன் பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால், ஆதில் ஹுசைன், பாக்யஸ்ரீ போர்ஸ் மற்றும் பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், வெளிநாடு மற்றும் பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பல நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களும் படக்குழுவில் இணைந்துள்ளனர்.

ஸ்ரீ கோகுலம் மூவீஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய படைப்புகளில் ஒன்றாக ‘ஆபரேஷன் கங்கா’ உருவாகி வருகிறது.

‘துரந்தர்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரபல இசையமைப்பாளர் ஷாஷ்வத் சச்தேவ், இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

‘புஷ்பா’, ‘புஷ்பா 2’ உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மிரோஸ்லாவ் குபா ப்ரோசெக், ‘ஆபரேஷன் கங்கா’ படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். ‘துரந்தர்’, ‘கில்’ உள்ளிட்ட படங்களில் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்த சே யங் ஓ, இப்படத்திற்கான சண்டைக் காட்சிகளை உருவாக்குகிறார்.

‘GOAT’, ‘மெய்யழகன்’, ‘அமரன்’, ‘கதனார்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய ராஜீவன் தயாரிப்பு வடிவமைப்பை கவனிக்கிறார். ஷமீர் முகமது படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

‘துரந்தர்’, ‘யூரி’, ‘3 இடியட்ஸ்’, ‘பத்மாவத்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய பிஷ்வதீப் சட்டர்ஜி, இப்படத்தின் சவுண்ட் டிசைன் பணிகளை மேற்கொள்கிறார்.

‘காந்தாரா’ படத்தின் VFX மேற்பார்வையாளராக பணியாற்றிய கே.வி. சஞ்சித், இப்படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை கவனிக்கிறார். ‘Safed Sagar’, ‘Border 2’, ‘Fighter’ உள்ளிட்ட படங்களில் மிலிட்டரி ஆலோசகராக பணியாற்றிய Squadron Leader Verlin Panwar, ‘ஆபரேஷன் கங்கா’ படத்திலும் ராணுவ ஆலோசகராக இணைந்துள்ளார்.

‘Lokah’ படத்தின் காஸ்ட்யூம் டிசைனர் மெல்வி ஜே, மேக்கப் கலைஞர் ரோனெக்ஸ் சேவியர் மற்றும் புரொடக்‌ஷன் கன்ட்ரோலர் ரின்னி திவாகர் ஆகியோரும் படக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இதனிடையே, ஸ்ரீ கோகுலம் மூவீஸ் தயாரிப்பில் சுரேஷ் கோபி நடிக்கும் ‘ஒட்டக்கொம்பன்’, ஜெயசூர்யா நடிக்கும் ‘கதனார்’ மற்றும் எஸ்.ஜே. சூர்யா இயக்கும் ‘கில்லர்’ உள்ளிட்ட பல பிரம்மாண்டமான திரைப்படங்களும் தற்போது தயாரிப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.