இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்துள்ள பான் இந்திய திரைப்படமான ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆக்ஷன், உணர்வுகள் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில், நடிகை தபு நடிக்கும் சக்திவாய்ந்த கதாபாத்திரமான கௌரி ஹெக்டே தற்போது பிரத்யேக முன்னோட்டம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே தபுவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், தற்போது வெளியான இந்த புதிய கிளிம்ப்ஸ் அவரது கதாபாத்திரத்தின் குணாதிசயங்களையும் அதிகாரத்தையும் ரசிகர்களுக்கு வெளிப்படுத்துகிறது.
நகரின் சேரிப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு தொடங்கும் இந்த முன்னோட்டம், படத்தின் இருண்ட மற்றும் கடினமான உலகத்தை முதலில் அறிமுகப்படுத்துகிறது. அதன் பின்னர் கௌரி ஹெக்டேவாக தபு களமிறங்கும் காட்சி இடம்பெறுகிறது.
காரில் வரும் தபு, சிகரெட்டை பற்ற வைத்தபடி அப்பகுதியின் சூழலை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். உள்ளூர் ரவுடி ஒருவருக்கு எச்சரிக்கை விடுப்பதுடன், அதிரடியாக அவரை அறையும் காட்சி, கௌரி ஹெக்டே சாதாரண அதிகாரி அல்ல என்பதை அழுத்தமாக உணர்த்துகிறது.
அதிகாரத்தைத் தேடிச் செல்பவர் அல்ல; தனது அதிகாரத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனநிலையுடன் செயல்படும் பெண்ணாக கௌரி ஹெக்டே கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் ரவுடிகள் மற்றும் எதிர்ப்பாளர்களை நேரடியாக எதிர்கொண்டு, தனது கட்டுப்பாட்டை நிலைநிறுத்தும் அவரது ஆக்ரோஷமான அணுகுமுறை முன்னோட்டத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
காவல்துறையினரும் பொதுமக்களும் சூழ்ந்திருக்கும் நிலையிலும், எந்தவித தயக்கமும் இல்லாமல் எதிர்ப்பவர்களை அடக்கும் கௌரி ஹெக்டேவின் கதாபாத்திரம், அச்சமற்ற பெண், சக்திவாய்ந்த அதிகாரி, இரக்கமற்றவர், துறையின் பிசாசு என பல்வேறு அடையாளங்களுடன் காட்சிப்படுத்தப்படுகிறது.
முன்னோட்டத்தின் இறுதியில், “கௌரி ஹெக்டே, துணை ஆணையர், வருமான வரித்துறை” என தன்னை அறிமுகப்படுத்தும் காட்சி கதாபாத்திரத்தின் கம்பீரத்தை மேலும் உயர்த்துகிறது. இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் பாணியில், வலுவான கதாபாத்திரத்தை அழுத்தமான முறையில் அறிமுகப்படுத்தும் காட்சியாக இது அமைந்துள்ளது.
இந்த முன்னோட்டத்தில் விஜய் சேதுபதியின் சில காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. தபுவின் தோற்றமும், உடல்மொழியும் கௌரி ஹெக்டே கதாபாத்திரத்திற்கு தேவையான அதிகாரத்தையும் அச்சுறுத்தலையும் கச்சிதமாக வழங்குகின்றன.
இப்படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க, துனியா விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரம்மாஜி மற்றும் விடிவி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் இருண்ட மற்றும் யதார்த்தமான உலகத்தை உருவாக்குவதில் தொழில்நுட்பக் குழுவினரும் முக்கிய பங்காற்றியுள்ளனர். சாம் கே. நாயுடு ஒளிப்பதிவு செய்ய, ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைத்துள்ளார். சந்தோஷ் நூஜில்லா படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
பூரி கனெக்ட்ஸ் சார்பில் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர், ஜே.பி. மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஜே.பி. நாராயண ராவ் கொண்ட்ரோல்லாவுடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
டைட்டில் லுக், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் தற்போது வெளியாகியுள்ள புதிய கிளிம்ப்ஸ் என ஒவ்வொரு அறிவிப்பின் மூலமும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, படத்தின் கதாபாத்திரங்களும் அவர்கள் வாழும் உலகமும் குறித்த ஆர்வத்தை இந்த புதிய முன்னோட்டம் மேலும் தூண்டியுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ள ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’, ஆக்ஷன், மர்மம் மற்றும் வலுவான கதாபாத்திரங்களுடன் ரசிகர்களுக்கு புதிய திரை அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





