ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற தமிழ் சட்ட நாடகத் தொடரான ‘சட்டமும் நீதியும்’ தொடரின் இரண்டாவது சீசனை ZEE5 அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், 18 கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் சசிகலா பிரபாகரன் தயாரிக்கும் இந்தத் தொடர், புதிய வழக்கு, புதிதாக உருவாகும் சிக்கல்கள் மற்றும் நீதிக்கான போராட்டத்தை மையமாகக் கொண்டு அடுத்த கட்டத்திற்குச் செல்கிறது.
முதல் சீசனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சரவணன், இரண்டாவது சீசனிலும் தனது கதாபாத்திரத்தைத் தொடர்ந்து ஏற்று நடிக்கிறார். இந்த சீசனில் நடிகை வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். அவரது கதாபாத்திரம் தொடரின் கதைக்களத்தில் புதிய திருப்பங்களையும், கூடுதல் பரபரப்பையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் சீசனில், தனது மகள் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே தந்தை ஒருவர் தீக்குளித்த சம்பவத்தைச் சுற்றி கதை நகர்ந்தது. முதலில் சாதாரண வழக்காகத் தொடங்கிய விசாரணை, பின்னர் அதிகாரம், செல்வாக்கு மற்றும் மறைக்கப்பட்ட உண்மைகள் அடங்கிய சிக்கலான வழக்காக மாறியது. உண்மையை வெளிக்கொண்டு வந்து நீதியை நிலைநாட்டும் முயற்சியில் சரவணன் எதிர்கொள்ளும் சவால்களும் கதையின் முக்கிய அம்சமாக அமைந்தன.
இந்நிலையில், ‘சட்டமும் நீதியும்’ சீசன் 2 முற்றிலும் புதிய வழக்குடன் பயணத்தைத் தொடர்கிறது. நீதிமன்றத்தில் வழங்கப்படும் தீர்ப்புகளை மட்டுமின்றி, அதிகாரம், செல்வாக்கு, தனிப்பட்ட முடிவுகள் மற்றும் சலுகைகள் ஆகியவை நீதியை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் இந்த சீசன் ஆராய்கிறது.
நீதியைப் பெறுவதற்காக ஒருவர் எந்த அளவுக்கு போராடத் தயாராக இருக்கிறார், அந்தப் போராட்டத்திற்காக அவர் கொடுக்க வேண்டிய விலை என்ன என்பதையும் கதைக்களம் ஆழமாகப் பதிவு செய்ய உள்ளது. மேலும், சரி – தவறு என்ற எளிய கோட்டுக்கு அப்பால் இருக்கும் தார்மீகக் குழப்பங்களையும், சட்டத்தின் பல்வேறு பரிமாணங்களையும் விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் வெளிப்படுத்துகிறது.
முதல் சீசனில் இடம்பெற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் நேர்மையான கதையாடலையும் தொடர்ந்து, இரண்டாவது சீசன் இன்னும் தீவிரமான கதைக்களம், பல அடுக்குகளைக் கொண்ட கதாபாத்திரங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உருவாகி வருகிறது. புதிய வழக்கும், வரலட்சுமி சரத்குமாரின் வருகையும் இந்த சீசன் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.





