V6 Film Pvt Ltd நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வேலாயுதம் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘தி கிராண்ட் மாஸ்டர்’. வெற்றிச்செழியன் எழுதி இயக்கியுள்ள இப்படம், வழக்கமான சினிமா கதைக்களத்திலிருந்து மாறுபட்டு சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் நிறைவேறாத கனவுகளுக்கான போராட்டத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
முன்னணி இயக்குநர்களான ஹெச். வினோத், சீனு ராமசாமி மற்றும் ஜனநாதன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட வெற்றிச்செழியன், தனது முதல் படைப்பாக ‘தி கிராண்ட் மாஸ்டர்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். அறிமுகப் படத்திலேயே சமூகத்தின் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைச் சூழலையும், அவர்களின் எதிர்கால கனவுகளையும் பதிவு செய்யும் கதையைத் தேர்வு செய்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக தூய்மை பணியாளராக உழைக்கும் ஒரு தாய், தனது மகன் எதிர்காலத்தில் செஸ் போட்டியில் சாதித்து கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்ற கனவைக் காண்கிறார். பொருளாதார நெருக்கடி, சமூகத் தடைகள் என பல்வேறு சவால்கள் அவர்களின் பாதையில் குறுக்கிட்டாலும், மகனின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அந்தத் தாய் தொடர்ந்து போராடுகிறார். அந்த தாய்–மகன் உறவையும், கனவை நோக்கிய அவர்களின் பயணத்தையும் மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.
வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் படத்தின் கதைக்கருவை உணர்த்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுவதும் சதுரங்கக் காய்கள் மற்றும் கட்டங்களால் நிரம்பிய பின்னணியில் தாயும் மகனும் வெவ்வேறு உணர்வுகளுடன் இடம்பெற்றுள்ளனர். கையில் செஸ் காயை வைத்தபடி சிறுவன் எதிர்காலத்தை நோக்கிய நம்பிக்கையுடன் மேலே பார்க்க, மறுபுறம் தாய் கவலை, வலி மற்றும் எதிர்பார்ப்பு கலந்த பார்வையுடன் காட்சியளிக்கிறார். கீழ்ப்பகுதியில் இருவரும் சைக்கிளில் பயணிக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளதால், அவர்களின் போராட்டப் பயணத்தை போஸ்டர் அழுத்தமாக பிரதிபலிக்கிறது.
இப்படத்தில் அபர்ணதி, லிங்கேஷ், சுரேஷ் மேனன், அஸ்வின், தமிழரசி, அன்பு, மனோ மதுரை, விசித்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் ஒளிப்பதிவை அர்ஜுன் ரவி மற்றும் ஞானசேகர் ஆர்.எஸ். இணைந்து மேற்கொண்டுள்ளனர். தினேஷ் ஆண்டனி இசையமைக்க, ரஞ்சீத் சி.கே. படத்தொகுப்பு பணிகளையும், ராகவன் சஞ்சீவி கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.
திண்டுக்கல், மதுரை, தடா, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
விரைவில் ‘தி கிராண்ட் மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூகத்தின் மறைக்கப்பட்ட ஒரு பக்கத்தையும், ஒரு தாயின் தியாகத்தையும் மகனின் கனவையும் மையமாகக் கொண்டுள்ள இப்படம் ரசிகர்களிடம் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.






