SIIMA 2026 விருது விழா கோலாகலமாக நடைபெற்ற நிலையில், தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களான சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி தங்களது படைப்புகளுக்காக விருதுகளை வென்றுள்ளனர். ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்திற்காக நடிகர் சசிகுமார் விருது பெற்றுள்ள நிலையில், ‘காந்தா’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சமுத்திரக்கனி சிறந்த துணை நடிகர் – தமிழ் என்ற விருதை தட்டிச் சென்றுள்ளார்.
நீண்ட காலமாக நட்புடனும், திரைப்பயணத்திலும் இணைந்து பயணித்து வரும் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி, ஒரே விருது மேடையில் தங்களது படைப்புகளுக்காக கௌரவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வரும் சமுத்திரக்கனி, தனது இயல்பான நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். அந்த வகையில், ‘காந்தா’ திரைப்படத்தில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டதற்காக SIIMA விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கதாபாத்திரத்தை வெளிப்புறமாக மட்டும் பிரதிபலிக்காமல், அதன் உணர்வுகளுக்குள் சென்று நடிப்பது சமுத்திரக்கனியின் பலமாக இருந்து வருகிறது. எந்த மொழியாக இருந்தாலும், கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப தனது நடிப்பை மாற்றிக்கொள்ளும் அவரது திறமை தொடர்ந்து பாராட்டுகளை பெற்று வருகிறது.
இந்த விருதை வழங்கிய SIIMA அமைப்பிற்கும், தேர்வுக்குழுவினருக்கும் சமுத்திரக்கனி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். அதேபோல், ‘காந்தா’ படத்தின் இயக்குநர் செல்வமணி செல்வராஜ், தயாரிப்பாளர்கள் ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரசாந்த் பொட்லூரி, ஜோம் வர்கீஸ் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
தற்போது பல்வேறு மொழிகளில் உருவாகி வரும் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் சமுத்திரக்கனி, வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’, முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘இருளன்’, ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘மைசா’, பூஜா அபர்ணா கொல்லூரு இயக்கத்தில் அக்ஷய் கண்ணா நடிக்கும் ‘மகாகாளி’, டேவிட் ரெட்டி மற்றும் கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘NBK 111’ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இதுதவிர, பிரசாந்த் வர்மா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ஜெய் ஹனுமான்’ திரைப்படத்திலும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், பிரசாந்த் வர்மாவின் சினிமாட்டிக் யூனிவர்ஸில் உருவாகி வரும் ‘மகாகாளி’ படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.
இதற்கிடையே, சமுத்திரக்கனி இயக்கி நடிக்கும் ‘School Bus’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் சசிகுமார், கிச்சா சுதீப் மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழிலும் ‘School Bus’ படத்தின் பிரம்மாண்டமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





