7 Miles Per Second Productions தயாரிப்பில், இயக்குநர் எம். செல்வகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘வேட்ட சாமி’. அருள்நிதி மற்றும் அமீர் முதன்மை கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த சிறப்பு வெளியீட்டை நடிகர் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டனர்.
கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் வழக்கமான கதாநாயகி பாத்திரம் இடம்பெறாமல், கதாபாத்திரங்களின் ஆழமும், சமூகப் பின்னணியும் முக்கிய இடம் பெற்றுள்ளது.
நெல்லை மாவட்டத்தின் பாரம்பரிய காவல் தெய்வங்களான சங்கிலி பூதத்தார், சுடலை மாடன் உள்ளிட்ட குலதெய்வ வழிபாட்டு மரபுகளை மையமாகக் கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது. சாதி, மத எல்லைகளைத் தாண்டி தலைமுறைகள் கடந்து வரும் சமூகச் சிக்கல்களை மக்களின் வாழ்வியலோடு இணைத்து சொல்லும் ஆக்ஷன் – உணர்வுப்பூர்வமான படைப்பாக ‘வேட்ட சாமி’ உருவாகியுள்ளது.
வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், அருள்நிதி சாமி ஆடையின் பரவச நிலையில் தீவிரமான தோற்றத்துடன் காணப்படுகிறார். பின்னணியில் இடம்பெற்றுள்ள பிரம்மாண்ட தெய்வச் சிலையும் நாட்டுப்புற கலை அம்சங்களும், படத்தின் கிராமிய மற்றும் ஆன்மிக உலகத்தை பிரதிபலிக்கின்றன.
அதேபோல், கிளிம்ப்ஸ் வீடியோ வில்லிசை கலைஞர் மாதவியின் குரலுடன் தொடங்கி, பாரம்பரிய தெய்வ வழிபாடு மற்றும் கிராமிய வாழ்வியலை மையமாகக் கொண்டு அருள்நிதி, அமீர் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறது. ஆன்மிக உணர்வுகளும், நாட்டுப்புற பண்பாடும் கலந்த இந்த காட்சிகள் ரசிகர்களிடம் தனித்துவமான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.
ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதோடு, படத்தின் மீதான ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது.
இப்படத்தில் ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ஹரீஷ் பேராடி, விஜி சந்திரசேகர், இந்துமதி மணிகண்டன், மைனா நந்தினி, இயக்குநர் தமிழ், கவிதா பாரதி, அயாஸ் கான், டி.எஸ்.கே., ஓ.ஏ.கே. சுந்தர், அர்ஜய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
‘பம்பர்’ படத்தை இயக்கிய எம். செல்வகுமார் கதை எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, 7 Miles Per Second Productions சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பையும், ஜி. துரைராஜ் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். சண்டைக் காட்சிகளை சிறுத்தை கணேஷ் வடிவமைத்துள்ளார்.
படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. வெளியான முதல் பார்வை மற்றும் கிளிம்ப்ஸ் மூலம், அருள்நிதி – அமீர் கூட்டணியில் உருவாகும் ‘வேட்ட சாமி’ திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.





