நீதிமன்றத்தில் வெடிக்கும் நச்சு விவசாய சர்ச்சை… “தி இந்தியா ஸ்டோரி” ஜூலை 24-ல் ரிலீஸ்

Zee Studios மற்றும் MIG Production நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் சேட்டன் DK இயக்கியுள்ள இப்படத்திற்கு, சாகர் B. ஷிண்டே கதை எழுதி தயாரிப்பையும் மேற்கொண்டுள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜூலை 24, 2026 அன்று உலகம் முழுவதும் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்த விவசாயம் மனிதர்களின் உடல்நலத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த நீதிமன்ற பின்னணியிலான சமூகப் படம், உண்மை சம்பவங்களின் தாக்கத்தை வலுவான திரைக்கதையின் மூலம் பதிவு செய்கிறது.

புதிய போஸ்டரில், காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இருவரும் கோபமடைந்த பொதுமக்களால் சூழப்பட்டிருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. காய்கறி சந்தையை பின்னணியாகக் கொண்ட இந்த காட்சியில், வியாபாரிகள் இருவரையும் நோக்கி காய்கறிகளை வீசி எதிர்ப்பு தெரிவிப்பதுடன், குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கின்றனர். உண்மையை வெளிக்கொணர முயற்சிப்பவர்களுக்கு சமூகத்தில் எழும் எதிர்ப்பையும் அழுத்தத்தையும் இந்த போஸ்டர் சக்திவாய்ந்த முறையில் வெளிப்படுத்துகிறது.

போஸ்டரில் இடம்பெற்றுள்ள “Slow Poison in Progress…” என்ற வாசகம், மெதுவாக மனிதர்களின் வாழ்வை அழிக்கும் மறைமுக ஆபத்தை சுட்டிக்காட்டுவதுடன், படத்தின் மையக் கருத்தையும் வலியுறுத்துகிறது.

இயக்குநர் சேட்டன் DK கூறுகையில்,

“உண்மையை பேசுவதற்கான விலையை இந்த போஸ்டர் பிரதிபலிக்கிறது. ஏமாற்றத்தின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பை கேள்வி கேட்கும்போது, முதலில் வெளிப்படுவது பயமும் கோபமும்தான். ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் ஒவ்வொரு காட்சியும் அந்தப் போராட்டத்தை உணர்த்துவதோடு, நாம் உண்ணும் உணவு மற்றும் நம்பிக்கைகளைப் பற்றி பார்வையாளர்கள் சிந்திக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.

இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளர்களாக ஸ்வாதி விநாயக் சைந்தானி, அனிதா ஜாதவ், விநாயக் சைந்தானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் நிஷாந்த் பகவத், இசையமைப்பாளர் மங்கேஷ் தாக்டே, படத்தொகுப்பாளர் ஆஷிஷ் மாத்ரே, பாடலாசிரியர் ஷகீல் அஜாமி மற்றும் ஒலி வடிவமைப்பாளர் அன்மோல் பாவே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சமூகத்தில் மறைந்திருக்கும் ஆபத்தான உண்மையை நீதிமன்ற பின்னணியில் பேசும் ‘தி இந்தியா ஸ்டோரி’, ஜூலை 24 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரசிகர்களை சந்திக்கிறது.