வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் AI வளாகம் திறப்பு: உயர்கல்வியில் புதிய மைல்கல்

சென்னை, ஜூலை 11, 2026: உயர்கல்வியில் தொழில்நுட்ப புரட்சிக்கு வழிவகுக்கும் வகையில், இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழக வளாகத்தை சென்னை திருவான்மியூரில் வேல்ஸ் பல்கலைக்கழகம் திறந்து வைத்து புதிய வரலாற்றை படைத்துள்ளது.

இந்த அதிநவீன கல்வி வளாகத்தை Zoho நிறுவனத்தின் இணை நிறுவுநரும் தலைமை விஞ்ஞானியுமான பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டாட்சி தேசிய கவுன்சில் உறுப்பினரும், எமிரேட்ஸ் ஏர்லைன் ஃபவுண்டேஷன் இயக்குநர் குழு உறுப்பினருமான மேதகு அஹ்மத் மீர் ஹாஷிம் அஹ்மத் கூரியும், Economic Group Holdings LLC நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம். எப். ராவூஃப் அலியும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர்-வேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தலைமையில் நடைபெற்ற விழாவில், துணைத் தலைவர் டாக்டர் ப்ரீத்தா கணேஷ் முன்னிலை வகித்தார்.

சென்னையின் தகவல் தொழில்நுட்ப மையமாக விளங்கும் திருவான்மியூரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வளாகம், செயற்கை நுண்ணறிவு சார்ந்த கல்வி மற்றும் ஆராய்ச்சியை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. AI வசதியுடன் கூடிய வகுப்பறைகள், ஸ்மார்ட் கற்றல் அமைப்புகள், நவீன ஆய்வகங்கள், புதுமை மையங்கள், டிஜிட்டல் நூலகம் மற்றும் உலகத் தரத்திலான மாணவர் வசதிகள் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.

மாணவர்களின் தொழில்துறை திறன்களை மேம்படுத்தும் நோக்கில் Intel Unnati, TCS iON, Microsoft மற்றும் Oracle Academy நிறுவனங்களுடன் இணைந்து தொழில்–கல்வி சிறப்பு மையங்களும் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங், High Performance Computing உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களில் நேரடி பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

நிகழ்ச்சியின் போது, வேல்ஸ் பல்கலைக்கழகமும் துபாயைச் சேர்ந்த Aspin Holding Group நிறுவனமும் விமானக் கல்வி, விமானப் போக்குவரத்து, தொழில்துறை பயிற்சி, மாணவர் பரிமாற்றம் மற்றும் சர்வதேச வேலைவாய்ப்பு வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. மேலும், செயற்கை நுண்ணறிவு, ஆராய்ச்சி, புதுமை மற்றும் திறன் மேம்பாட்டு துறைகளில் Zoho நிறுவனத்துடனும் விரைவில் ஒத்துழைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

விழாவின் சிறப்பம்சமாக, பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு மாணவர்களுடன் கலந்துரையாடி, செயற்கை நுண்ணறிவு, தொழில்முனைவு, புதுமை மற்றும் இந்தியாவின் தொழில்நுட்ப எதிர்காலம் குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். உலகளாவிய போட்டிகளில் முன்னிலை வகிக்கத் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ளுமாறு மாணவர்களை அவர் ஊக்குவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர்-வேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷ்,

உலகின் வேகமான தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப கல்வியும் மாற்றமடைய வேண்டிய காலகட்டத்தில் நாம் இருப்பதாகக் குறிப்பிட்டார். திருவான்மியூரில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழக வளாகம், புதுமை, ஆராய்ச்சி, தொழில்முனைவு மற்றும் எதிர்காலத் திறன்களுடன் மாணவர்களை உருவாக்கும் நவீன கல்வி வளாகமாக அமையும் என்றார்.
மேலும், திண்டிவனத்தில் 350 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த பல்கலைக்கழக வளாகம், பெரியபாளையம் மருத்துவ வளாக விரிவாக்கம், அடையாறு மற்றும் ஹைதராபாத் வளாகங்களின் மேம்பாடு உள்ளிட்ட வேல்ஸ் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களையும் அவர் அறிவித்தார். தரமான உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதில் வேல்ஸ் நிறுவனம் உறுதியாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், தொழில்நுட்பம், புதுமை மற்றும் தேச முன்னேற்றத்தில் பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு ஆற்றி வரும் பங்களிப்புகளைப் பாராட்டிய அவர், இந்திய ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் Zoho நிறுவனத்தின் “Nation First” கொள்கையையும், தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டியை உலக அரங்கில் பெருமையுடன் அணிந்து தமிழர் பண்பாட்டை உயர்த்தி வருவதையும் சிறப்பாகக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டாட்சி தேசிய கவுன்சில் உறுப்பினரும், எமிரேட்ஸ் ஏர்லைன் ஃபவுண்டேஷன் இயக்குநர் குழு உறுப்பினருமான மேதகு அஹ்மத் மீர் ஹாஷிம் அஹ்மத் கூரி கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு தனது நன்றியைத் தெரிவித்த டாக்டர் ஐசரி கே. கணேஷ், இந்தியா–ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான கல்வி மற்றும் விமானப் போக்குவரத்து ஒத்துழைப்பு மேலும் வலுப்பெற வேண்டும் என்றார்.

வரவேற்புரையாற்றிய வேல்ஸ் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் டாக்டர் ப்ரீத்தா கணேஷ்,

“மாணவர்களுக்கு உலகத் தரத்திலான கற்றல் சூழலை உருவாக்குவதே எங்கள் நோக்கம். இத்தகைய சிறப்புமிக்க கல்வி வளாகத்தின் திறப்பு விழாவில் உலகப் புகழ்பெற்ற ஆளுமைகள் பங்கேற்பது எங்களுக்கு பெருமை அளிக்கிறது. அவர்களின் சாதனைகளும் வாழ்க்கைப் பயணமும் நமது மாணவர்களுக்கு என்றென்றும் உத்வேகமாக அமையும்,” என்றார்.

கவுரவ விருந்தினராக கலந்து கொண்ட மேதகு அஹ்மத் மீர் ஹாஷிம் அஹ்மத் கூரி,

வேல்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சியைப் பாராட்டியதுடன், அதன் முன்னேற்றத்தை எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் வளர்ச்சியுடன் ஒப்பிட்டுப் பேசினார்.

“1985-ஆம் ஆண்டு சில விமானங்களுடன் தொடங்கிய எமிரேட்ஸ், இன்று 250-க்கும் மேற்பட்ட விமானங்களைக் கொண்ட உலகின் முன்னணி விமான நிறுவனமாக வளர்ந்துள்ளது. அதைப் போலவே வேல்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சியும் மிகவும் பாராட்டத்தக்கது.

இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையிலான நட்பு நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது. சென்னை எனது இதயத்திற்கு மிகவும் நெருக்கமான நகரம். கல்வி, விமானப் போக்குவரத்து மற்றும் புதுமைத் துறைகளில் இரு நாடுகளும் மேலும் இணைந்து செயல்பட வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

தொடக்க உரையாற்றிய பத்மஸ்ரீ ஸ்ரீதர் வேம்பு,

திருவான்மியூர் வளாகத்தின் கட்டிடக் கலை, தொலைநோக்குப் பார்வை மற்றும் நவீன உள்கட்டமைப்பை வெகுவாகப் பாராட்டினார்.
“திருவான்மியூரில் உருவாக்கப்பட்டுள்ள வேல்ஸ் வளாகம், உலகத் தரத்திலான கட்டிடக் கலையுடன் அமைந்த சிறப்பான கல்வி வளாகமாகும். உலகளாவிய போட்டியில் இந்தியா முன்னிலை வகிக்க வேண்டுமெனில், அடிப்படை அறிவியல் முதல் மேம்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வரை அனைத்தையும் தன்னிறைவுடன் உருவாக்க வேண்டும். அண்மையில் ஜப்பான் பயணத்தின் போது இதன் அவசியத்தை மேலும் தெளிவாக உணர்ந்தேன். விமானங்கள் உள்ளிட்ட உயர்தர தொழில்நுட்பங்களை நம் நாட்டிலேயே உருவாக்க வேண்டும். எதிர்காலத்தில் வேல்ஸ் நிறுவனத்துடன் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட Zoho நிறுவனம் ஆர்வமாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு, ஆராய்ச்சி, புதுமை மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைகளில் வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்திடப்படவுள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

இந்த புதிய AI ஒருங்கிணைந்த கல்வி வளாகத்தின் திறப்பு, தொழில்நுட்பம், புதுமை மற்றும் தொழில்–கல்வி இணைப்பை மையமாகக் கொண்டு இந்திய உயர்கல்வியை உலகத் தரத்திற்கு கொண்டு செல்லும் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் முக்கிய முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது.