டீசரும், இரண்டு பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள ‘ஓ! சுகுமாரி’ திரைப்படம், விரைவில் திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது. திரு வீர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம், காதல், நகைச்சுவை மற்றும் கிராமத்து வாழ்க்கையின் அழகை இணைக்கும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படைப்பாக உருவாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் கதை எழுதி இயக்கியுள்ள இப்படத்தை கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மகேஸ்வரா ரெட்டி மூலி தயாரித்துள்ளார். தற்போது படத்தின் திரையரங்கு வெளியீட்டை முன்னிட்டு அதிகாரப்பூர்வ ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
வெளியாகியுள்ள ட்ரெய்லரில், ‘தாமினி’ என்ற வித்தியாசமான இளம் பெண்ணின் வாழ்க்கை அறிமுகப்படுத்தப்படுகிறது. அவரை யார் தொட்டாலும் மின்சாரம் தாக்கியதுபோல் அதிர்ச்சி ஏற்படும் ஒரு மர்மமான நிலை காரணமாக, ஊர்மக்கள் அவரைத் தவிர்த்து வாழ்கின்றனர். இந்த உண்மையை மறைத்து அவரது குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்க, அதன் பிறகு புதுமண வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவங்கள் தொடர்கின்றன.
இந்த விசித்திரமான சூழ்நிலையை கணவன்-மனைவி இருவரும் எப்படி சமாளிக்கிறார்கள், அந்தப் பயணத்தில் காதல், நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியை எவ்வாறு மீட்டெடுக்கிறார்கள் என்பதையே படம் நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமான திரைக்கதையுடன் சொல்லவிருக்கிறது.
இயக்குநர் பரத் தர்ஷன், உணர்ச்சிகளையும் நகைச்சுவையையும் சமநிலையுடன் கலந்து வித்தியாசமான கதையை திரையில் கொண்டு வந்திருக்கிறார். கிராமத்து இளைஞனாக திரு வீர் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியுள்ளார். இவர்களுடன் முரளிதர் கௌட், விஷ்ணு ஒய், ஜான்சி, ஆமனி, ஆனந்த் கோட்டா ஜெயராம் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் சி.எச். குஷேந்தர், கிராமத்து இயற்கை அழகை திரையில் அழகாகப் பதிவு செய்திருக்கிறார். இசையமைப்பாளர் பரத் மஞ்சிராஜு, கதையின் நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளுக்கு ஏற்ற உற்சாகமான இசையை வழங்கியுள்ளார். தயாரிப்பு வடிவமைப்பை திருமலா எம். திருப்பதி கவனித்துள்ள நிலையில், படத்தொகுப்பை ஸ்ரீ வர பிரசாத் மேற்கொண்டுள்ளார்.
காதல், நகைச்சுவை, உணர்ச்சி மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட இந்த ட்ரெய்லர், ‘ஓ! சுகுமாரி’ திரைப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், ஜூலை 17 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.





