நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் புதிய பான் இந்தியா திரைப்படமான #DQ41-க்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ (Sri Sri) என்ற தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் ரவி நேலகுதிடி இயக்கும் இந்த படத்தை, SLV Cinemas நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி தயாரிக்கிறார். இது அந்த நிறுவனத்தின் 10-வது தயாரிப்பாக உருவாகி வருகிறது. இஷான் சக்சேனா இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.
இந்த திரைப்படத்தில், முதல் முறையாக துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கின்றனர். காதல், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளை இணைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
“Love Will Spark Again” என்ற டேக்லைனுடன் வெளியாகியுள்ள இந்த தலைப்பு, காதலை மீண்டும் புதுப்பிக்கும் நம்பிக்கையான பயணத்தை உணர்த்துகிறது. இதன் மூலம் மனதை வருடும் காதல் கதையாக படம் அமையும் என்ற சுட்டிக்காட்டும் வெளிப்படுகிறது.
வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், துல்கர் சல்மானும் பூஜா ஹெக்டேயும் சுவரின் மீது அமர்ந்து இயல்பாக உரையாடும் தருணம் இடம் பெற்றுள்ளது. இளநீல நிற சட்டை, சாம்பல் நிற பேண்ட் மற்றும் கண்ணாடியுடன் தோன்றும் துல்கர் சல்மான், வெட்கம் கலந்த புன்னகையுடன் கீழ்நோக்கிப் பார்க்க, இளநீல நிற சல்வாரில் பூஜா ஹெக்டே அவரை புன்னகையுடன் ரசிக்கும் தோற்றத்தில் காணப்படுகிறார்.
இருவரின் உடை அலங்காரமும், இயல்பான உடல்மொழியும் அவர்கள் கல்லூரி நண்பர்களாகவோ அல்லது வகுப்புத் தோழர்களாகவோ இருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. எளிமையான பின்னணி, அமைதியான சூழல் மற்றும் இருவரின் முகபாவனைகள், வார்த்தைகளால் சொல்ல முடியாத நெருக்கத்தையும் பாசத்தையும் அழகாக வெளிப்படுத்துகின்றன.
மொத்தத்தில், இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் காதல், நம்பிக்கை மற்றும் நேர்மறை உணர்வுகளை பிரதிபலிப்பதுடன், குடும்பம் முழுவதும் ரசிக்கும் காதல் பொழுதுபோக்கு திரைப்படமாக ‘ஸ்ரீ ஸ்ரீ’ உருவாகி வருவதை உணர்த்துகிறது.
தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவை அனய் ஓம் கோஸ்வாமி, இசையை ஜி.வி. பிரகாஷ் குமார், கலை இயக்கத்தை அவிநாஷ் கொல்லா மேற்கொண்டு வருகின்றனர்.
பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ‘ஸ்ரீ ஸ்ரீ’, தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.






