ரிலீஸ் தேதியுடன் அதிரடி அப்டேட் கொடுத்த “கான் சிட்டி” படக்குழு

“கான் சிட்டி” திரைப்படத்தின் டீசர் மற்றும் முதல் இரண்டு சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ரிலீஸ் தேதி அறிவிப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பட அறிவிப்பின் ஆரம்பத்திலிருந்தே அதன் வித்தியாசமான கதைக்களம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. தொடர்ந்து வெளியான டீசரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியது. குறிப்பாக “ரா ரா ரங்கையா” முதல் சிங்கிள் பாடல் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அதனைத் தொடர்ந்து வெளியாகிய “நான் தான் கிங்கு” பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஷான் ரோல்டன் இசையில் உருவான இந்தப் பாடல்கள், அதன் தனித்துவமான மேக்கிங் மற்றும் புதுமையான இசை பாணியால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

“கான் சிட்டி” திரைப்படம், நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு மற்றும் கமர்ஷியல் அம்சங்கள் அனைத்தும் கலந்த முழுமையான ஃபேமிலி என்டர்டெயினராக இப்படம் உருவாகி வருகிறது.

மங்களூர், சென்னை மற்றும் மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டீசர், முதல் மற்றும் இரண்டாம் சிங்கிள் பாடல்கள் என தொடர்ந்து வெளியாகிய ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியான ஜூன் 26 ரிலீஸ் தேதி அறிவிப்பு “கான் சிட்டி” திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.