சிவகார்த்திகேயன் தொடங்கி வைத்த சூரியின் புதிய திரைப்படம்!

நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அக்டோபர் 14-ஆம் தேதி சிறப்பான முறையில் தொடங்கியது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை, ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ ஆகிய படங்களை இயக்கிய ரவிக்குமார் இயக்குகிறார். இப்படத்திற்கு ‘சூரி 7’ என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ளது.

படப்பிடிப்புத் தொடக்க விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டு கிளாப் அடித்தார். தயாரிப்பாளர் ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் கேமராவை இயக்கி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் பிரபலங்கள் இந்நிகழ்வில் பங்கேற்று படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

நடிப்பில் தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூரி, ‘விடுதலை பாகம் 1’, ‘விடுதலை பாகம் 2’, ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் கதாநாயகனாகத் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார். இந்நிலையில், முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அவர் நடிக்கும் இப்படம், அவரது திரைப்பயணத்தில் மற்றொரு முக்கியமான படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘சூரி 7’ திரைப்படம், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நான்காவது தமிழ்ப் படமாகும். நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரிக்கும் இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார். வித்தியாசமான கதைக்களங்களை நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் வழங்குவதில் கவனம் செலுத்தி வரும் இயக்குநர் ரவிக்குமார், சூரியுடன் இணைந்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

படத்தின் தொடக்க விழாவில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இயக்குநர் மதிமாறன், லைகா புரொடக்ஷன்ஸ் தமிழ்க்குமரன், இயக்குநர் கீர்த்தீஸ்வரன், பாந்தம் பிலிம்ஸ் பிஜாய் அற்புதராஜ், இயக்குநர்கள் ஏ.ஆர்.கே. சரவணன், நலன் குமாரசாமி, மித்ரன், வெற்றிமாறன், ராம்குமார், தயாரிப்பாளர் அருண் விஸ்வா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி நிகழ்வில் பேசியபோது,

“தமிழில் நாங்கள் தயாரித்த ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’, ‘மொத ராத்திரி’, ‘இருமுடி’ ஆகிய படங்களுக்குக் கிடைத்த வெற்றியும் வரவேற்பும், இந்த மொழியில் மேலும் பல படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை எனக்கு அதிகரித்தது. தற்போது சூரி நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறோம். நிகழ்வில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கும் சூரிக்கும் இடையே இருந்த நட்பையும் அன்பையும் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் எல்ரெட் குமார் மற்றும் அனைத்து திரையுலகப் பிரபலங்களுக்கும் நன்றி” என்றார்.

இயக்குநர் ரவிக்குமார் பகிர்ந்து கொண்டதாவது,

“மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற முன்னணி தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கதாநாயகனாக சூரி தனக்கென தனியிடம் பிடித்திருக்கிறார். அவரது திறமை மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு நியாயம் செய்யும் வகையில் அவரைத் திரையில் காட்ட வேண்டிய கூடுதல் பொறுப்பு எனக்கு இருக்கிறது.

தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல வெற்றிப் படங்களை வழங்கிய மைத்ரி மூவி மேக்கர்ஸ், தமிழிலும் தனது தயாரிப்புப் பணிகளை விரிவுபடுத்தி வருகிறது. ‘குட் பேட் அக்லி’ உள்ளிட்ட படங்களுக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, புதிய கதைகளையும் திறமையான கலைஞர்களையும் இணைத்து அடுத்தடுத்த படங்களை உருவாக்கும் முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

தற்போது ‘சூரி 7’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு, மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.