திகில் மற்றும் மர்மம் கலந்த கதைக்களத்தில் உருவாகி வரும் “தாழ் திறவா” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. Barman Pictures தயாரிப்பில், இயக்குநர் பரணி சேகரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஆதவ் கண்ணதாசன் மற்றும் வாணி போஜன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
உலகளவில் பெரும் மதிப்பும் கவனமும் பெற்ற Cannes Film Festival விழாவில், “தாழ் திறவா” படத்தின் டீசர் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மே 19ஆம் தேதி கேன்ஸ் திரைப்பட விழாவின் இந்தியன் பவிலியனில் திரையிடப்பட்ட இந்த டீசர், தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் தருணமாக பார்க்கப்படுகிறது.
ஒரு கிராமத்தில் கண்டெடுக்கப்படும் பழமையான எழுத்துக்கள் மற்றும் அதன் பின்னணியில் மறைந்திருக்கும் மர்மமான ஆபத்துகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. தமிழில் அகழ்வாராய்ச்சி பின்னணியுடன் ஹாரர் மற்றும் அமானுஷ்ய அம்சங்களை இணைத்து உருவாகும் அரிய முயற்சியாக “தாழ் திறவா” அமைந்துள்ளது.
இன்று வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது. முதல் போஸ்டரில், இருள் சூழ்ந்த அறையில் சுவரிலிருந்து நீளும் மர்மக் கைகள் வாணி போஜன்-ஐ இழுத்துச் செல்ல முயலும் நிலையில், அவரைக் காப்பாற்ற பதட்டத்துடன் ஓடி வரும் ஆதவ் கண்ணதாசன் காட்சியளிக்கிறார்.
இரண்டாவது போஸ்டரில், பழமையான மாளிகை, மர்மமான சூழல், அமானுஷ்ய சம்பவங்களை கண்டு அதிர்ச்சியடையும் குழந்தைகள் மற்றும் ஒரு ரகசிய கதவை திறக்க முயலும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. பயத்துடனும் பதட்டத்துடனும் நிற்கும் கதாபாத்திரங்களின் தோற்றம், படம் வித்தியாசமான ஹாரர் அனுபவத்தை தரப்போகிறது என்பதை உணர்த்துகிறது.
இப்படத்தில் சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு, ஷ்யாம் பிரசாத் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். குழந்தை நட்சத்திரங்களான லிஷா மற்றும் லலித் ஆகியோரும் கதையின் முக்கிய அங்கங்களாக இடம்பெற்றுள்ளனர்.
படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள “தாழ் திறவா” திரைப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.





