வெளியீட்டுக்கு முன்பே எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்ற “பெத்தி” டிரெய்லர்

ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள பான்-இந்தியா திரைப்படமான “பெத்தி” திரைப்படத்தின் பிரம்மாண்ட டிரெய்லர் வெளியாகி, ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில், விருத்தி சினிமாஸ் நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.

வெளியீட்டுக்கு முன்பே நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள “பெத்தி”, கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள ஆக்ஷன் – ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், கதாபாத்திர அறிமுகங்கள் மற்றும் மனதை கவரும் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் எதிர்பார்ப்பை மேலும் பல மடங்கு உயர்த்தியுள்ளது.

மும்பையில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வெளியிடப்பட்ட இந்த டிரெய்லர், ஹீரோ அறிமுகத்தை விட ஒரு முழுமையான கிராமத்து உலகத்தை பார்வையாளர்களுக்கு முன்வைக்கிறது. உழைப்பு, போராட்டம் மற்றும் விளையாட்டின் மீதான தீவிரமான காதலை மையமாகக் கொண்ட இந்தக் கதையில், “பெத்தி” என்ற கதாபாத்திரத்தில் ராம் சரண் பல திறமைகள் கொண்ட விளையாட்டு வீரராக காட்சியளிக்கிறார். கிரிக்கெட், மல்யுத்தம், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல விளையாட்டுகளில் திறமையை நிரூபிக்கும் மனிதராக அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கிராம மக்களின் அன்பையும் மரியாதையையும் பெறும் “பெத்தி”யின் வளர்ச்சி, ஒரு ஆதிக்கம் செலுத்தும் ஜமீன்தாரின் பொறாமையை தூண்டும் விதமாக அமைந்துள்ளது. இயக்குநர் புச்சி பாபு சனா உருவாக்கிய இந்த உலகம், மண் வாசனை மிக்க உணர்வுகளுடனும், பரபரப்பான காட்சிகளுடனும் உயிரோட்டமாக திரையில் விரிகிறது.

டிரெய்லரில் இடம்பெறும் மாபெரும் சண்டைக் காட்சிகள், ரயில் நிலைய மேடைகளில் நடக்கும் அதிரடி மோதல்கள், கிரிக்கெட் மற்றும் மல்யுத்தத்தை இணைத்து உருவாக்கப்பட்ட புதுமையான காட்சிகள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளன. வழக்கமான விளையாட்டு திரைப்படங்களின் பாணியை பின்பற்றாமல், “பெத்தி” தனக்கென ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகியுள்ளது.

ராம் சரண், தனது உடல் மொழி, தீவிரமான நடிப்பு மற்றும் வலிமையான திரைநிலையால் “பெத்தி” கதாபாத்திரமாக முழுமையாக மாறியிருப்பது டிரெய்லரில் தெளிவாக தெரிகிறது. ஜான்வி கபூர் பாரம்பரிய கவர்ச்சியுடன் தனது கதாபாத்திரத்தில் நளினத்தை கொண்டு வந்துள்ளார். மேலும் சிவராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா, பொமன் இரானி உள்ளிட்டோர் கதைக்கு வலிமை சேர்க்கும் விதமாக நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப ரீதியாகவும் “பெத்தி” மிகப்பெரிய தரத்தில் உருவாகியுள்ளது. தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா உருவாக்கிய கிராமப்புற உலகம் இயல்பும் நுணுக்கமும் கலந்ததாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் ஜான்வி கபூர், வண்ணமயமான ஃப்ரேம்களுடனும் பிரம்மாண்ட காட்சியமைப்புகளுடனும் படத்தை பதிவு செய்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மானின் இசை, உணர்ச்சிகளையும் ஆக்ஷன் தருணங்களையும் மேலும் உயர்த்தியுள்ளது.

சர்வதேச தரத்தில் உருவாகியுள்ள “பெத்தி” திரைப்படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமும் பெரிய திரைக்காக செதுக்கப்பட்டதுபோல் அமைந்துள்ளது. சமீப காலங்களில் வெளியாகிய டிரெய்லர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை வழங்கும் இந்த டிரெய்லர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை தற்போது உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.