KRG கண்ணன் ரவி தயாரிப்பில், பிரபுதேவா – வடிவேலு இணைந்து நடித்துள்ள ‘பேங் பேங்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் ஒரே படத்தில் இணைந்திருப்பதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஆரம்பத்திலிருந்தே அதிகரித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள டீசர் அந்த எதிர்பார்ப்பை மேலும் எகிறச் செய்துள்ளது.
டீசர் தொடங்கும் காட்சிகளே படத்தின் வித்தியாசமான உலகத்தை அறிமுகப்படுத்துகின்றன. எரிமலை வெடித்து லாவா வெளியேறும் பரபரப்பான நிலப்பரப்பில், இதுவரை பார்த்திராத தோற்றத்தில் பிரபுதேவாவும் வடிவேலுவும் காட்சியளிக்கின்றனர். அவர்களைச் சுற்றிலும் ஆபத்தான சூழல் நிலவும் நிலையில், ஜாம்பிகளாக மாறிய மனிதர்கள் இருவரையும் துரத்தும் காட்சிகள் டீசருக்கு வேகத்தையும் பரபரப்பையும் சேர்க்கின்றன.
ஒருபுறம் ஜாம்பிகளின் அச்சுறுத்தல், மறுபுறம் எரிமலை மற்றும் உயிருக்கு ஆபத்தான சூழல் என படம் சீரியஸான ஆக்ஷன் களத்தில் பயணிப்பது போல் தெரிந்தாலும், அதற்குள் வடிவேலுவின் காமெடி டிராக்கும் இணைந்துள்ளது. அவரது தனித்துவமான உடல்மொழி மற்றும் நகைச்சுவையான வெளிப்பாடுகள் பதற்றமான காட்சிகளுக்கு நடுவிலும் சிரிப்பை ஏற்படுத்துகின்றன.
பிரபுதேவாவின் ஸ்டைலான தோற்றம், ஆக்ஷன் காட்சிகள் மற்றும் திரை ஆளுமை படத்திற்கு மாஸ் அம்சத்தை வழங்குகிறது. அதே நேரத்தில் வடிவேலுவின் காமெடி அந்த ஆக்ஷன் உலகத்திற்கு முற்றிலும் மாறுபட்ட சுவையை கொடுக்கிறது. குறிப்பாக இந்த இருவரின் காமெடி கூட்டணி ஜாம்பி கதைக்களத்துடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது என்பதே ரசிகர்களின் முக்கிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
பிரபுதேவாவும் வடிவேலுவும் இணைந்து நடித்த காலகட்டத்தில் இவர்களது கூட்டணி ரசிகர்களிடையே தனி வரவேற்பைப் பெற்றிருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்திருப்பதால், ‘பேங் பேங்’ திரைப்படத்தின் மீதான ஆர்வம் இயல்பாகவே அதிகரித்துள்ளது.
ஏற்கனவே வெளியான டைட்டில் டீசரில் ஜாம்பிகளுக்கு நடுவே துப்பாக்கியுடன் இருவரும் தோன்றிய காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தன. தற்போது வெளியாகியுள்ள புதிய டீசர், ஆக்ஷன், ஹாரர், அட்வென்ச்சர் மற்றும் காமெடி ஆகிய அம்சங்களை கலந்து உருவாக்கப்பட்ட கமர்ஷியல் என்டர்டெய்னராக இப்படம் இருக்கும் என்பதை உணர்த்துகிறது.
சாம் ரோட்ரிகஸ் எழுதி இயக்கும் இப்படத்தை KRG கண்ணன் ரவி தயாரிக்கிறார். தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். H.C. வேணு ஒளிப்பதிவை மேற்கொள்ள, சுரேஷ் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பையும், டான் பாலா கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.
படத்தின் முக்கியமான காட்சிகள் இந்தோனேசியாவின் புகழ்பெற்ற Mount Bromo எரிமலைப் பகுதி மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளன. படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ள நிலையில், நடிகர் பப்லு பிரித்திவிராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வித்தியாசமான ஜாம்பி களம், எரிமலை பின்னணி, பிரம்மாண்ட ஆக்ஷன் காட்சிகள், பிரபுதேவாவின் மாஸ் தோற்றம் மற்றும் வடிவேலுவின் நகைச்சுவை என பல்வேறு அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘பேங் பேங்’, டீசர் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த பிரபுதேவா – வடிவேலு கூட்டணி… ஜாம்பி உலகில் என்ன செய்யப் போகிறது என்பதே ‘பேங் பேங்’ மீதான அடுத்த எதிர்பார்ப்பு!





