நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் ‘தி பாரடைஸ்’. பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வெளியீட்டுத் தேதி குறித்து பரவி வந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் படக்குழு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் சுதாகர் செறுகுரி பேசுகையில், ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாக பல்வேறு வதந்திகள் உலா வருவதாகவும், ஆனால் திட்டமிட்டபடி செப்டம்பர் 24ஆம் தேதியே படம் திரைக்கு வரும் என்றும் தெரிவித்தார். தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து, அதன் இறுதி வடிவம் தங்களுக்கு மிகுந்த திருப்தியை அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா பேசுகையில், படத்தின் வெளியீட்டில் சிறிய தாமதம் ஏற்பட்டிருந்தாலும், வெளியான கிளிம்ப்ஸ், டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
‘தி பாரடைஸ்’ திரைப்படம் வழக்கமான ஆக்ஷன் கதையாக மட்டும் இல்லாமல், தாய் – மகன் உறவை மையமாகக் கொண்ட ஆழமான உணர்வுப்பூர்வமான கதையாக உருவாகியுள்ளதாக இயக்குநர் கூறினார். அதே நேரத்தில், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் குரலையும் இப்படம் பதிவு செய்யும் என குறிப்பிட்டார்.
“பிறப்பும் இறப்பும் நமக்கானது, ஆனால் வாழ்வு நாட்டுக்கானது” என்ற கவிஞர் கலோஜியின் வரிகளை அடிப்படையாகக் கொண்டு, தங்களது உரிமைக்காக போராடும் மக்களின் வாழ்க்கையை கதைக்களமாக உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மொத்தம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் ஓடும் இப்படத்திற்கு தனியாக டிரெய்லர் வெளியிட வேண்டாம் என படக்குழு முடிவு செய்துள்ளது. ரசிகர்களுக்கு படத்தின் முழுமையான உணர்வையும், அனுபவத்தையும் நேரடியாக திரையரங்கில் வழங்க வேண்டும் என்பதே இதற்கான காரணம் என இயக்குநர் விளக்கமளித்தார்.
நடிகர் நானி பேசுகையில், படத்தின் வெளியீட்டு தேதி இரண்டு முறை மாற்றப்பட்டதால் ஆரம்பத்தில் சிறிது தயக்கம் ஏற்பட்டதாகவும், இருப்பினும் ரசிகர்கள் தொடர்ந்து அளித்த ஆதரவு தங்களது பொறுப்பை மேலும் அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.
‘தி பாரடைஸ்’ திரைப்படம் தனது பயணத்தில் தனக்கென ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டதாக உணர்வதாக குறிப்பிட்ட நானி, இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலாவின் பிரம்மாண்டமான பார்வையை திரையில் சிறப்பாக கொண்டு வருவதற்கு படக்குழு முழுமையாக உழைத்துள்ளதாக தெரிவித்தார்.
வெளியீட்டுக்கு குறுகிய காலமே இருப்பதால் டிரெய்லரை வெளியிடவில்லை என்றும், ரசிகர்கள் படத்தை நேரடியாக திரையரங்கில் அனுபவிக்க வேண்டும் என்பதே தங்களது நோக்கம் என்றும் அவர் கூறினார்.
மேலும், தனது திரைப்பயணத்தில் மிகவும் கடினமான மற்றும் சவாலான திரைப்படமாக ‘தி பாரடைஸ்’ அமைந்துள்ளதாக நானி குறிப்பிட்டார். படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் பங்கேற்றபோது தனக்கும் சக நடிகர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டதாகவும், படத்திற்காக மேற்கொண்ட கடின உழைப்பை திரையில் ரசிகர்கள் உணர முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
வெளியான டீசரை மட்டும் பார்த்துவிட்டு ‘தி பாரடைஸ்’ முழுக்க முழுக்க வன்முறையை மையமாகக் கொண்ட படமாக இருக்கும் என சிலர் கருதுவதாகவும், ஆனால் உண்மையில் இது அழுத்தமான உணர்வுகளுடன் கூடிய அழகான தாய் – மகன் உறவின் கதையை பேசும் திரைப்படம் என்றும் நானி கூறினார்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் மோகன் பாபு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், செப்டம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் அதிரடி மற்றும் உணர்வுப்பூர்வமான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்க படக்குழு தயாராகியுள்ளது.
தாய் – மகன் பாசம், சமூக உரிமைக்கான போராட்டம் மற்றும் பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள் என பல்வேறு அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் செப்டம்பர் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.





