நவம்பர் 20-ல் திரைக்கு வரும் துல்கர் சல்மானின் “AOT” – அதிகாரப்பூர்வமானது ரிலீஸ் தேதி!

துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஆகாசம்லோ ஓக தாரா’ (AOT) திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பவன் சாதினேனி இயக்கியுள்ள இப்படத்தில் துல்கர் சல்மானுடன் சாத்விகா வீரவல்லி மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

லைட்பாக்ஸ் மீடியா சார்பில் சந்தீப் குண்ணம் மற்றும் ரம்யா குண்ணம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஸ்வப்னா சினிமா மற்றும் கீதா ஆர்ட்ஸ் நிறுவனங்கள் வழங்குகின்றன. ‘AOT’ திரைப்படம் வரும் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது.

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடையும் வகையில் பல்வேறு புரமோஷன் நிகழ்ச்சிகளை படக்குழு திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே வெளியான படத்தின் முதல் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், தொடர்ந்து கேட்கத் தூண்டும் பாடலாகவும் கவனம் பெற்றுள்ளது. தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

‘AOT’ தொடர்பான ஒவ்வொரு புதிய அப்டேட்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், துல்கர் சல்மான் ரசிகர்கள் மத்தியில் படத்தைப் பற்றிய ஆர்வம் அதிகரித்துள்ளது.

வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து நடித்து வரும் துல்கர் சல்மானின் நடிப்பு, இயக்குநர் பவன் சாதினேனியின் தனித்துவமான அணுகுமுறை மற்றும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் பிரம்மாண்ட ஆதரவு ஆகியவை இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளன.

இப்படத்திற்கு திறமையான ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்வேதா சாபு சிரில் தயாரிப்பு வடிவமைப்பை கவனித்துள்ளார். அனுபவம் வாய்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஆகாசம்லோ ஓக தாரா’, தெலுங்கு, தமிழ், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

திரையரங்கு வெளியீட்டுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், ‘AOT’ திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் மற்றும் புரமோஷன் நிகழ்ச்சிகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.