எழுத்தாளர்கள் சங்கத்தில் பாடலாசிரியராக இணைந்த சிவகார்த்திகேயன்!

இன்று நடிகர் சிவகார்த்திகேயனை தமிழ் திரைப்பட எழுத்தாளர்கள் சங்க நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். மேலும், சங்கம் சார்பில் நடைபெறவுள்ள விழாவில் அவர் கலந்து கொள்வது தொடர்பாகவும் இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்பட்டது.

எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் சேரன், பொதுச்செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் சுந்தர்ராஜன், துணைத்தலைவர் சினேகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களான இயக்குநர்கள் செல்வபாரதி, KBB நவீன் உள்ளிட்டோர் சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது, சங்க நிர்வாகிகளின் வேண்டுகோளை ஏற்று, சிவகார்த்திகேயன் சங்கத்தில் பாடலாசிரியராக இணைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சங்கத்தின் செயல்பாடுகள் தொடர்பாக தனது கருத்துகளையும் சில ஆலோசனைகளையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

அதேபோல், சங்கம் ஏற்பாடு செய்யும் விழாவில் கலந்து கொள்வதாகவும் சிவகார்த்திகேயன் உறுதியளித்துள்ளார். அவரை சந்தித்து உரையாடியதில் மகிழ்ச்சி அடைந்ததாகவும், நிறைவான மனதுடன் அவரை வழியனுப்பி வைத்ததாகவும் எழுத்தாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.