தமிழ் திரையுலகில் தனது முதல் திரைப்படத் தயாரிப்பை தொடங்கியுள்ள பனோரமா ஸ்டுடியோஸ், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து புதிய சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தை உருவாக்குகிறது. ‘ஏர்லிஃப்ட்’, ‘செஃப்’, ‘பிப்பா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜா கிருஷ்ண மேனன் இப்படத்தை இயக்குகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
படத்தில் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பெண்களை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், டார்க் சைக்கலாஜிக்கல் திரில்லர் பாணியில் மர்மம், பரபரப்பு மற்றும் வலுவான உணர்வுகளை இணைத்து உருவாகவுள்ளது.
தமிழ், மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் தங்களது நடிப்புத் திறனால் தனி கவனம் பெற்ற மூன்று தலைமுறை நடிகைகள் ஒரே படத்தில் இணைந்திருப்பது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. த்ரிஷா கிருஷ்ணன் பல்வேறு வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பெற்றுள்ள ராதிகா சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேசிய விருது பெற்ற அபர்ணா பாலமுரளியும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் இடம்பெறுகிறார்.
பனோரமா ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படம், ஃபியூஷன் பிலிக்ஸ் மற்றும் லோகோமோட்டிவ் குளோபல் புரொடக்ஷன் நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கப்படுகிறது. குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக், சுந்தர் ஆரோன், விகாஸ் சர்மா மற்றும் அமித் தல்மியா ஆகியோர் தயாரிப்பாளர்களாக உள்ளனர். ராஜேஷ் மேனன் மற்றும் ஜார்ஜ் கேமரூன் இணைத் தயாரிப்பாளர்களாகவும், அபினவ் மெஹ்ரோத்ரா கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.
தென்னிந்திய சினிமாவில் தனது தயாரிப்பு மற்றும் விநியோகப் பணிகளை விரிவுபடுத்தி வரும் பனோரமா ஸ்டுடியோஸ், ஏற்கனவே மலையாளத்தில் பல்வேறு படங்களுடன் இணைந்துள்ளது. ‘அனோமி’, ‘உன்மதம்’, ‘டிக்கி டாக்கா’ உள்ளிட்ட படங்கள் அந்நிறுவனத்தின் மலையாளத் திரைப்படப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மேலும், ‘புரொடக்ஷன் நம்பர் 4’ மற்றும் டொவினோ தாமஸ் நடிக்கும் ‘முன்பே’ ஆகிய படங்களின் பணிகளும் நடைபெற்று வருகின்றன. தற்போது தமிழ் சினிமாவில் தனது முதல் தயாரிப்பின் மூலம் அடுத்த கட்டத்தை நோக்கி நிறுவனம் பயணிக்கிறது.
பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் குமார் மங்கத் பதக் பகிர்ந்து கொண்டதாவது,
“தமிழ் சினிமா எப்போதுமே துணிச்சலான, தனித்துவமான மற்றும் ஆழமாக வேரூன்றிய கலாச்சார கதைகளைச் சொல்லும் களமாக இருந்து வருகிறது. எங்களின் முதல் தமிழ் தயாரிப்பும் அதே உணர்வை பிரதிபலிக்க வேண்டும் என்று விரும்பினோம். மிகவும் சுவாரஸ்யமான உலகத்தைக் கொண்ட வித்தியாசமான திரைப்படம் இது. இயக்குநர் ராஜா சிறப்பாக கதையை உருவாக்கியுள்ளார். இத்தகைய திறமையான கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தப் படம் பார்வையாளர்களுக்கு புதிய சினிமா அனுபவத்தை வழங்கும் என நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் ’ஏர்லிஃப்ட்’, ’செஃப்’ மற்றும் ’பிப்பா’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனி முத்திரை பதித்தவர். வலுவான மனித உணர்வுகளையும், சுவாரஸ்யமான உலகங்களையும் மையமாகக் கொண்ட கதைகளை தொடர்ந்து கையாண்டு வரும் அவர், தற்போது முதன்முறையாக உளவியல் திரில் ஜானரில் களமிறங்குகிறார். இருண்ட மற்றும் பரபரப்பான கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தின் மூலம், ராஜா கிருஷ்ண மேனன் தனது தனித்துவமான கதை சொல்லும் பாணியில் புதிய களத்தை கொண்டு வருகிறார்.
இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் பகிர்ந்து கொண்டதாவது,
“ஒருவர் என்னை எந்த ஜானரிலும் சிக்காத கதைகள் இயக்கும் இயக்குநர் என்று மிகவும் பொருத்தமாக ஒருமுறை குறிப்பிட்டார். அந்தப் பயணத்தின் மற்றுமொரு புதிய முயற்சிதான் இந்தப் படம். பல வகைகளில் எனக்கு முதல் அனுபவமாக இப்படம் அமைந்துள்ளது. இது என்னுடைய முதல் தமிழ் திரைப்படம், முதல் உளவியல் திகில் படம் மற்றும் முழுக்க முழுக்க பெண்களை மையமாகக் கொண்ட எனது முதல் கதை. அதோடு, த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா மேடம், அபர்ணா பாலமுரளி போன்ற அற்புதமான நடிகர்கள் மற்றும் திறமையான தொழில்நுட்பக் குழுவினருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது என்னை மேலும் உற்சாகமாகியுள்ளது. பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் குமார் மங்கத் ஜி ஆகியோரின் ஆதரவுக்கு நன்றி. அதேபோல், லோகோமோட்டிவ் குளோபலின் விகாஸ் மற்றும் சுந்தர் ஆகியோர் கதையை எந்தவித சமரசமும் இல்லாமல், அது சொல்லப்பட வேண்டிய விதத்தில் சொல்ல வேண்டும் என்று சொல்லியிருக்கின்றனர். இத்தகைய சிறந்த குழு கிடைத்ததற்கு மகிழ்ச்சி” என்றார்.
லோகோமோட்டிவ் குளோபலின் மேனேஜிங் பார்ட்னரும் தயாரிப்பாளருமான சுந்தர் ஆரோன் மற்றும் தயாரிப்பாளர் விகாஸ் ஷர்மா பகிர்ந்து கொண்டதாவது, “எல்லைகளைக் கடந்து பயணிக்கும் அதே நேரத்தில், மனித உணர்வுகளை வலுவாக சொல்லும் கதைகளே லோகோமோட்டிவ் குளோபலின் தேர்வு. திகில், மிஸ்ட்ரி மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்களைக் கொண்ட இந்த தமிழ் மொழி சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படத்தின் கதை எங்களை உடனடியாக கவர்ந்தது. த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா மேடம் மற்றும் அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட திறமையான நடிகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, லண்டனில் படமாக்கப்படும் இப்படம், நாங்கள் உருவாக்கி வரும் தரமான திகில் திரைப்படங்களின் வரிசையில் முக்கியமானதாக மாறியுள்ளது.
லண்டனில் முக்கிய பகுதிகள் படமாக்கப்படவுள்ள இப்படம், வித்தியாசமான கதைக்களம் மற்றும் சர்வதேச தரத்திலான காட்சியமைப்புடன் உருவாகிறது. ராஜா கிருஷ்ண மேனனின் இயக்கம், மூன்று முன்னணி நடிகைகளின் கூட்டணி மற்றும் மர்மம் நிறைந்த கதைக்களம் என பல அம்சங்கள் இருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படம் தொடர்பான நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் வெளியீடு உள்ளிட்ட கூடுதல் தகவல்கள் அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





