பாரமவுண்ட் பிக்சர்ஸ் மற்றும் லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் உலகளாவிய ‘வேர்ல்ட் வாரியர் டூர்’ ஜப்பானில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இதன் தொடக்க நிகழ்வாக டோக்கியோவில் உள்ள பிரபல ஷின்ஜுகு யூனிகா விஷன் திரைகளில் இப்படத்தின் முதல் டிரெய்லர் வெளியிடப்பட்டது.
இந்த பிரம்மாண்ட நிகழ்வில் படத்தின் முன்னணி நட்சத்திரங்களான நோவா சென்டினியோ, ஆண்ட்ரூ கோஜி, கலினா லியாங் மற்றும் ஜேசன் மோமோவா ஆகியோர் பங்கேற்றனர். அவர்களுடன் ஜப்பானிய நடிகர் ஹிரூகி கோட்டோ, குரல் கலைஞர் ஈகோ கனோ, இயக்குநர் கிட்டாவ் சகுராய் மற்றும் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ கேமின் இயக்குநர் தகாயுகி நகயாமா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டில் புதிய முயற்சியாக, ரசிகர்கள் டிரெய்லரை பார்ப்பதுடன் அதனுடன் இணைந்த விளையாட்டையும் விளையாடும் வகையில் புதிய அனுபவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. யூடியூப் தளத்தில் முதன்முறையாக முழுமையாக இன்டராக்டிவாக விளையாடக்கூடிய திரைப்பட டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் டிரெய்லரை ரசித்துக்கொண்டே அதில் நேரடியாக பங்கேற்று, ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ உலகத்திற்குள் பயணிக்க முடியும்.
1993ஆம் ஆண்டை கதைக்களத்தின் பின்னணியாகக் கொண்ட இப்படத்தில், ஒருகாலத்தில் இணைந்து போராடிய ரியூ மற்றும் கென் மாஸ்டர்ஸ் இருவரும் சில கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சண்டைக் களத்திற்கு வருகின்றனர். மர்மமான சுன்-லி, அடுத்த ‘வேர்ல்ட் வாரியர்’ போட்டியில் பங்கேற்க இருவரையும் அழைக்கிறார்.
போட்டி தொடங்கியதும் ஆக்ரோஷமான மோதல்கள், பழிவாங்கும் உணர்வு மற்றும் கடந்த காலத்தின் காயங்கள் என பல்வேறு சிக்கல்கள் அவர்களைச் சுற்றி உருவாகின்றன. இதற்கிடையே, போட்டியின் பின்னணியில் மிகப்பெரிய ஆபத்தான சதித்திட்டம் ஒன்று இருப்பது தெரியவருகிறது. இதனால் ரியூ மற்றும் கென், ஒருவரையொருவர் எதிர்கொள்வதுடன், தங்களது கடந்த காலத்தையும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது.
ஆர்கேட் கேம் உலகில் பல ஆண்டுகளாக ரசிகர்களைக் கவர்ந்து வரும் ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ கதாபாத்திரங்களை முதன்முறையாக பிரம்மாண்ட திரை அனுபவமாக கொண்டு வருகிறது இப்படம். ஹடோகென், ரவுண்ட்ஹவுஸ் கிக் உள்ளிட்ட புகழ்பெற்ற சண்டை நுட்பங்களுடன், அதிரடியான ஆக்ஷன் காட்சிகளும் ரசிகர்களுக்குப் பிடித்த கதாபாத்திரங்களும் இடம்பெறுகின்றன.
இப்படத்தில் கென் மாஸ்டர்ஸ் கதாபாத்திரத்தில் நோவா சென்டினியோவும், ரியூவாக ஆண்ட்ரூ கோஜியும், சுன்-லியாக கலினா லியாங்கும் நடித்துள்ளனர். அகுமாவாக ஜோ ‘ரோமன் ரெயின்ஸ்’ அனோவாய், எம். பைசனாக டேவிட் டாஸ்ட்மால்சியன், குயிலேவாக கோடி ரோட்ஸ், டான் ஹிபிகியாக ஆண்ட்ரூ ஷுல்ஸ், டான் சாவேஜாக எரிக் ஆண்ட்ரே, தல்சிமாக வித்யுத் ஜம்வாலும் நடித்துள்ளனர்.
மேலும் வேகா கதாபாத்திரத்தில் ஆர்வில் பெக், சாங்கிஃபாக ஆலிவர் ரிக்டர்ஸ், இ. ஹோண்டாவாக ஹிரூகி கோட்டோ, ஜூலியாக ரெய்னா வல்லண்டிங்ஹாம், ஜோவாக அலெக்சாண்டர் வோல்கனோவ்ஸ்கி, பால்ராக்காக கர்டிஸ் ‘50 சென்ட்’ ஜாக்சன் மற்றும் பிளாங்காவாக ஜேசன் மோமோவா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
கிட்டாவ் சகுராய் இயக்கியுள்ள இப்படம், கேம் ரசிகர்களையும் ஆக்ஷன் திரைப்பட ரசிகர்களையும் கவரும் வகையில் பிரம்மாண்டமான திரை அனுபவமாக உருவாகியுள்ளது.
‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படம் இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 16 அக்டோபர் 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.





