நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கி வரும் புதிய திரைப்படம் ‘தகப்பன்’. அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளை கதைக்களமாகக் கொண்டுள்ள ‘தகப்பன்’, முழுமையான கிராமத்து பின்னணியுடன் உருவாகி வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற நிலையில், தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள செய்தி படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.
45 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் அர்ப்பணிப்பான பணியால் திட்டமிட்ட காலத்தைவிட முன்கூட்டியே, வெறும் 40 நாட்களில் படப்பிடிப்பு முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு நிறைவு குறித்து இயக்குநர் ரா. வெங்கட் கூறுகையில்..,
படப்பிடிப்பு நிறைவு குறித்து இயக்குநர் ரா. வெங்கட் கூறுகையில், திட்டமிட்டதைவிட முன்னதாக படப்பிடிப்பை முடிக்க முடிந்ததற்கு நடிகர் ஜீவாவின் அபாரமான அர்ப்பணிப்பும் ஒத்துழைப்பும்தான் முக்கிய காரணம் என்றார். மேலும், கதாநாயகி ரஜிஷா விஜயனின் சிறப்பான ஒத்துழைப்பு, ஒளிப்பதிவாளர் சுகுமாரின் பங்களிப்பு மற்றும் ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவினரின் அர்ப்பணிப்பான உழைப்பாலேயே 45 நாட்கள் திட்டமிடப்பட்ட படப்பிடிப்பை 40 நாட்களில் நிறைவு செய்ய முடிந்ததாகக் கூறி, அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
‘தகப்பன்’ படத்தின் பயணம் மேலூர் பகுதியில் உள்ள கோயிலில் நடைபெற்ற துவக்க விழாவுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு கட்டங்களாக படப்பிடிப்பு நடத்தப்பட்டதுடன், மதுரை நகரிலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
சிறப்பம்சமாக, படப்பிடிப்பு தொடங்கிய அதே மேலூர் பகுதியில் உள்ள மேலவளவு கருப்பு கோயிலிலேயே படத்தின் இறுதிக்கட்ட இரவு நேரப் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது. படம் தொடங்கிய இடத்திலேயே படப்பிடிப்பை நிறைவு செய்தது ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, படக்குழுவினர் மேலவளவு கருப்பு கோயிலில் கிடா வெட்டி, பொதுமக்களுக்கு விருந்து வழங்கி தங்களது மகிழ்ச்சியை அப்பகுதி மக்களுடன் பகிர்ந்து கொண்டனர். படக்குழுவினரின் இந்த நடவடிக்கை அப்பகுதி மக்களிடையேயும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
‘தெனாவெட்டு’ படத்திற்குப் பிறகு ஜீவா முழுமையான கிராமத்து கதைக்களத்தில் நடிக்கும் திரைப்படமாக ‘தகப்பன்’ உருவாகி வருகிறது. இதனால், ஜீவாவின் திரைப்பயணத்தில் இப்படம் ஒரு வித்தியாசமான படைப்பாக அமையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இப்படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். சுயாதீன இசைக்கலைஞரான மார்ஷல் ராபின்சன் இசையமைக்கிறார். K. குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு M. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பையும், K.B. நந்தபாலன் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.
சண்டைக் காட்சிகளை மகேஷ் மேத்யூ வடிவமைக்கிறார். M. செல்வராஜ் மற்றும் ரிதேஷ் செல்வராஜ் ஆடை வடிவமைப்பை மேற்கொள்கின்றனர். T. உதய் குமார் ஒலிப்பதிவுப் பணிகளை கவனிக்கிறார். அன்பு புகைப்படங்களை பதிவு செய்கிறார்.
R. பாலகுமார் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், பிரிதிவிராஜா சின்னசாமி விநியோகத் தலைவராகவும் பணியாற்றுகின்றனர். மக்கள் தொடர்புப் பணிகளை யுவராஜும், விளம்பர வடிவமைப்பை தினேஷ் அசோக்கும் மேற்கொள்கின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ‘தகப்பன்’ திரைப்படத்தை வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஜீவாவின் புதிய கிராமத்து கதைக்களம் என்பதால், இப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.





