“ஹபிபீ”, “டபுள் ஆக்குபன்ஸி” வெற்றியின் பின்னணியில் சாம் CS இசை மாயம்

இசை என்பது வெறும் என்பது வெறும் பாடல்களோ அல்லது பின்னணி இசையோ அல்ல; ஒரு கதையின் ஆன்மாவை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்திவாய்ந்த மொழி. அந்த வகையில், ஒவ்வொரு திரைப்படத்திற்கும் அதன் தன்மைக்கு ஏற்ற இசையை வழங்கி தனக்கென தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளவர் இசையமைப்பாளர் சாம் CS.

நேற்று வெளியான இரண்டு வித்தியாசமான திரைப்படங்களான “ஹபிபீ” மற்றும் “டபுள் ஆக்குபன்ஸி” படங்கள், சாம் CS-ன் இசை திறனின் இரண்டு மாறுபட்ட பரிமாணங்களை வெளிப்படுத்தியுள்ளன.

உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள “ஹபிபீ”, மனித உணர்வுகள், வலி, நம்பிக்கை மற்றும் வாழ்க்கைப் போராட்டங்களை மையமாகக் கொண்ட ஆழமான படைப்பாக உருவாகியுள்ளது. இப்படத்தில் கதாபாத்திரங்களின் மனநிலையையும் உணர்வுகளையும் பார்வையாளர்களிடம் வலுவாகக் கொண்டு சேர்க்கும் வகையில், மனதைத் தொடும் மெலடிகளையும் உணர்வுப்பூர்வமான பின்னணி இசையையும் சாம் CS வழங்கியுள்ளார். காட்சிகள் முடிந்த பின்னரும் அதன் தாக்கம் மனதில் நீடிக்க காரணமாக அவரது இசை அமைகிறது.

மறுபுறம், ஃபேண்டஸி மற்றும் நவீன பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த “டபுள் ஆக்குபன்ஸி”, இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு தேவையான துடிப்பான சவுண்ட், நவீன இசை பாணி மற்றும் புத்துணர்ச்சியான இசை மொழியை சாம் CS திறமையாக உருவாக்கியுள்ளார். படத்தின் கற்பனை உலகிற்கு ஏற்ற இசை அனுபவத்தை வழங்குவதன் மூலம், அதன் பொழுதுபோக்கு அம்சங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளார்.

ஒரே நாளில் வெளியான இந்த இரண்டு திரைப்படங்களின் ஜானர், உணர்வு, கதை சொல்லும் முறை என அனைத்தும் முற்றிலும் வேறுபட்டவை. அந்த இரண்டு உலகங்களுக்கும் ஏற்ற இசையை உருவாக்கி, ஒரு இசையமைப்பாளராக தனது பல்துறை திறனை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் சாம் CS.

சமீப காலங்களில் பின்னணி இசை மட்டுமின்றி பாடல்களிலும் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் சாம் CS, ஒவ்வொரு படைப்பிலும் புதுமையான இசை அனுபவத்தை வழங்கி வருகிறார். கதையின் தேவையை ஆழமாகப் புரிந்து, அதற்கேற்ப தனது இசை மொழியை மாற்றிக்கொள்ளும் திறமையே அவரை இந்திய சினிமாவின் மிகவும் தேடப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவராக உயர்த்தியுள்ளது.

தமிழ் மட்டுமின்றி இந்தியாவின் பல மொழி ரசிகர்களின் கவனத்தையும் தனது தனித்துவமான இசை மற்றும் உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தும் மெலடிகள் மூலம் ஈர்த்து வரும் அவர், தற்போது பாலிவுட் உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

அதில் முக்கியமாக புஷ்கர்-காயத்ரி இயக்கும் அடுத்த திரைப்படம், ரவிமோகனின் “கராத்தே பாபு”, கார்த்தியின் “சர்தார் 2” உள்ளிட்ட படங்களில் இசையமைத்து வருகிறார். மேலும் இயக்குநர் ஹெச். வினோத் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோருடன் இணையும் புதிய திட்டங்களிலும் அவர் பணியாற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு பாலிவுட், தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்பட உலகங்களிலும் பல புதிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ச்சியாக வெவ்வேறு ஜானர்களில் தனது இசை முத்திரையை பதித்து வரும் சாம் CS, இந்திய திரையுலகின் முக்கிய இசை சக்திகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.