யுவன் ஷங்கர் ராஜாவின் இசையுடன் வளர்ந்த மில்லினியல்ஸ் தலைமுறையைத் தொடர்ந்து, இன்றைய Gen Z தலைமுறையும் அவரது இசையை கொண்டாடி வருவது சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. தலைமுறைகள் மாறினாலும், யுவனின் இசைக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
திரையிசையில் யுவன் ஷங்கர் ராஜா கால் பதித்து கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் கடந்துள்ளன. இந்த நீண்ட பயணத்திலும் அவரது இசை ஒரு குறிப்பிட்ட தலைமுறைக்குள் மட்டும் நின்றுவிடாமல், அடுத்தடுத்த தலைமுறைகளையும் சென்றடைந்து வருகிறது. ஒரு காலகட்டத்தில் ரசிகர்களின் நினைவுகளோடு இணைந்த பாடல்கள் மற்றும் இசைக்கோர்வைகள், தற்போது புதிய தலைமுறையினரால் மீண்டும் கண்டறியப்பட்டு, தங்களுக்கான இசை அனுபவமாக கொண்டாடப்பட்டு வருகின்றன.
இந்த தலைமுறைகளின் இசை இணைப்பை வெளிப்படுத்தும் விதமாக செப்டம்பர் 19 அன்று சென்னையில் நடைபெற்றது ‘Walking Through the Rainbow’ நிகழ்ச்சி. யுவனின் பிரபலமான பின்னணி இசைகள், இசை மையக்கருக்கள் மற்றும் இதுவரை வெளியிடப்படாத இசைப் படைப்புகள் ஆகியவை சிம்பொனி வடிவில் ரசிகர்களுக்கு வழங்கப்பட்டன. இதன் மூலம் யுவனின் திரையிசை ஒரு புதிய பரிமாணத்தில் மேடையேறியது.
இசைஞானி இளையராஜாவின் மகனாக இசை பாரம்பரியத்தில் இருந்து வந்தாலும், யுவன் ஷங்கர் ராஜா தனது இசைக்கென தனித்துவமான பாணியை உருவாக்கிக் கொண்டார். எலக்ட்ரானிக் இசை, ஹிப்-ஹாப், R&B, புதுமையான குரல் பயன்பாடுகள் என பல்வேறு இசை வடிவங்களை தனது படைப்புகளில் இணைத்து தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
தமிழ் சினிமாவில் ரீமிக்ஸ் கலாச்சாரத்திற்கு புதிய வேகம் கொடுத்தது முதல், திரைப்படத்தின் பின்னணி இசையையும் தனி இசை அனுபவமாக ரசிகர்கள் கேட்டு ரசிக்கும் சூழலை உருவாக்கியது வரை, இசையை உருவாக்கும் மற்றும் ரசிகர்கள் அதை அனுபவிக்கும் முறைகளில் யுவனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.
அந்த இசைப் பயணத்தின் அடுத்தகட்ட முயற்சியாகவே ‘Walking Through the Rainbow’ உருவாகியுள்ளது. இதுவரை திரைக்குப் பின்னால் ஒலித்த யுவனின் பின்னணி இசை, இந்த நிகழ்ச்சியில் மேடையின் பிரதான அம்சமாக மாறி, முழுமையான சிம்பொனி அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கியது.
யுவனின் பின்னணி இசைக் கோர்வைகளை Bangkok 28 Orchestra கலைஞர்கள் பயிற்சி செய்து மேடையில் இசைத்தனர். இதனுடன் The Indian Choral Ensemble, யுவன் ஷங்கர் ராஜாவின் சொந்த இசைக்குழு மற்றும் இந்திய தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்து நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தனர். இதன் மூலம் யுவனின் சினிமா இசைக்கு சர்வதேச சிம்பொனி இசை வடிவம் கிடைத்தது.
இசை மட்டுமின்றி ஒலி அமைப்பு, மேடை வடிவமைப்பு, ஒளி மற்றும் காட்சி தொழில்நுட்பம், காட்சி வழி கதைசொல்லல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி உருவாக்கப்பட்டது. Luners Talent Management நிறுவனம், Noise & Grains நிறுவனத்துடன் இணைந்து நிகழ்ச்சியின் தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டது.
யுவனின் இசைக்குழுவைச் சேர்ந்த ஜஃப்ரூன் நிஜார் மற்றும் அபிஷேக் ரங்கநாதன் ஆகியோரின் ஆக்கப்பூர்வ பங்களிப்பும் நிகழ்ச்சியின் வடிவமைப்பில் முக்கிய பங்கு வகித்தது.
இதுகுறித்து நிகழ்ச்சி இயக்குநர் கார்த்திக் ஸ்ரீனிவாஸ் கூறுகையில், யுவனின் இசையை ரசிகர்கள் வழக்கமான முறையிலிருந்து மாறுபட்ட கோணத்தில் அனுபவிக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம் என்றும், அதற்கேற்ப ரசிகர்களை யுவனின் இசை உலகிற்குள் அழைத்துச் செல்லும் வகையில் ஒவ்வொரு அம்சமும் வடிவமைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தயாரிப்பு இயக்குநர் மகாவீர் கூறுகையில், ‘Walking Through the Rainbow’ ஒரு தொடக்கம் மட்டுமே என்றும், தொடர்ந்து பல புதிய பின்னணி இசைக் கோர்வைகள், புதிய அத்தியாயங்கள் மற்றும் மேலும் பிரம்மாண்டமான இசை அனுபவங்களுடன் இந்தப் பயணம் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி செல்லும் என்றும் தெரிவித்துள்ளார்.
மூன்று தலைமுறைகளுக்கும் நெருக்கமான யுவன் ஷங்கர் ராஜாவின் இசையை, புதிய சிம்பொனி வடிவில் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய ‘Walking Through the Rainbow’, அவரது இசைப் பயணத்தில் மற்றுமொரு புதுமையான முயற்சியாக அமைந்துள்ளது.





